MV X-Press Pearl கப்பல் தீ விபத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு – நிவாரணம் வழங்குமாறு செந்தில் தொண்டமான் கோரிக்கை

” MV X-Press Pearl கப்பலில் ஏற்பட்ட தீ பரவவால் கப்பலில் இருந்து வெளியேறியுள்ள சிதைவுகள் மற்றும் இரசாயன அமிலங்களால்  மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இத்தீவிபத்து காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் தமது பணிகளை வழமை போன்று முன்னெடுக்கும் சூழல் உருவாகும்வரை அவர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும்.” – என்று பிரதமரின் இணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவருமான செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்துக்கு அண்மித்த கடற்பரப்பில் MV X-Press Pearl கப்பல் தீ விபத்துக்கு உள்ளான நிலையில் இலங்கை விமான மற்றும் கடற்படையினரின் தீவிர முயற்சியால் தற்போது தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்திய கரையோர பாதுகாப்பு படையினரும் தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர உதவிகளை வழங்கி வருகின்றனர்.

கப்பலின் சிதைவுகளும் அதில் கொண்டுவரப்பட்ட கொள்கலன்களிலிருந்த பொருட்களும் கரையொதுங்கி வருகின்றன. தெஹிவளை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டிய, பமுனுகம, ஜாஹெல, நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களில் கப்பலின் சிதைவு பொருட்கள் கரையொதுங்கியுள்ளன.

கொள்கலன்களில் இருந்து வெளியேறியுள்ள இரசாயன (நைட்ரஜன்) அமிலங்கள் காரணமாக ஜாஹெல முதல் நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. நாட்டின் ஏனைய கடற்பரப்பிலும் கப்பல் சிதைவுகள் கரையொதுங்கியுள்ளதால் அங்கும் மீனவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் வழமை போன்று மீண்டும் தமது தொழிலை முன்னெடுக்கக் கூடிய சூழல் உதயமாகும்வரை இவர்களுக்கு நிவாரணத்தை வழங்க அரசு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார் .

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் நெருக்கடிக்கு மத்தியில் இந்த கப்பல் விபத்து மீனவர்களின்  வாழ்வாதாரத்தை முற்றாக பாதித்துள்ளது. ஆகவே, இந்த விடயத்தில் அரசு கூடிய கரிசனையை செலுத்தும் என நம்புவதாகவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles