மலையக மக்களுக்கு காணி உரிமை பெற்றுக் கொடுப்பதாகக் கூறி வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து பெருமளவு நிதியைப் பெற்றுக் கொள்ள ஆர்ப்பாட்டங்களை நடத்தி ஏமாற்றி வரும் சில அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டில் மக்கள் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மலையக மக்களுக்கு காணி உரிமையை முன்வைத்து சில அரச சார்பற்ற நிறுவனங்கள் எத்தனையோ ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்துள்ளன. ஆனால், இன்றுவரை ஓர் அங்குல நிலத்தையாவது பெற்றுக் கொடுத்தாக வரலாறு கிடையாது. அவர்களின் நோக்கம் எல்லாம் போக்குவரத்து செலவுகளோடு, உணவு வசதிகளை செய்து கொடுத்து மக்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவதாகக் கூறி ஊடகங்களில் இடம்பிடித்து வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து பெருமளவு நிதிகளைப் பெற்று, தாங்களும் தங்கள் குடும்பமும் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதாகும். இதற்கு சில அரசியல்வாதிகள் துணை போவது மலையக மக்களுக்கு செய்கின்ற மாபெரும் துரோகமாகும்.
அதேநேரம், மலையகத்தில் இயங்கி வருகின்ற சில அரச சார்பற்ற நிறுவனங்கள் உண்மையிலேயே மக்கள் நலன்கருதி செயற்பட்டு வருவதோடு, அரசியல் ரீதியில் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஆக்கபூர்வமான ஆலோனைகளை வழங்கி உறுதுணையாக இருந்து வருகின்றன. இவற்றுக்கு நேர்மாறாக மக்களை தவறாக வழிநடத்தும் நிறுவனங்களிடம் மக்கள் கவனமாக இருந்து கொள்வதோடு, அரசியல் ரீதியில் தான் எதையும் சாதிக்க முடியும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்ற போது, மலையக மக்களுக்கு தலா 7 பேர்ச் காணியுடன் தனி வீடுகளை அமைத்துக் கொடுத்து அவற்றுக்கான காணி உறுதிப் பத்திரங்களை வழங்க வேண்டும், நுவரெலியா மாவட்டத்தில் சனத்தொகைக்கு ஏற்ப பிரதேச சபைகள், செயலகங்கள் அதிகரிக்கப்பட வேண்டும், மலையகத்துக்கென தனியான அதிகார சபை உருவாக்கப்பட வேண்டும் முதலான கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இடம்பெறச் செய்து நல்லாட்சி அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்திக் காட்டியிருந்தோம்.
எனவே, அரசியல் ரீதியில் அல்லாமல் காணி உரிமை பற்றி பேசுவதாலும், கலந்துரையாடல்களை நடத்தி அறிக்கை விடுவதாலும், ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதாலும், குறிப்பிட்ட சிலரை சேர்த்துக் கொண்டு எதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டம் செய்வதாலும், அரசியல்வாதிகளை விமர்சனம் செய்வதாலும் எதையும் சாதிக்க முடியாது என்பதை மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
மக்களின் உரிமைகளுக்காக பாராளுமன்றத்தில் குரல்கொடுத்து, பிரேரணைகளைக் கொண்டு வந்து, அமைச்சரவையின் அங்கீகாரத்தோடு நடைமுறைப்படுத்த முடியுமே தவிர, வெளிநாட்டு நிதிகளைத் திரட்டிக் கொள்ள தனிப்பட்ட ரீதியில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களால் சமூகத்துக்கு எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
