‘O/L பரீட்சைக்கூட சித்தியடையாத 290 பேர் ஊவாவில் முன்பள்ளி ஆசிரியர் பணியில்’

ஊவா மாகாணத்தில் ஆயிரத்து 493 முன்பள்ளிகள் இருந்து வருகின்றன. இம் முன்பள்ளிகளில் கடமையிலுள்ள ஆசிரியைகளில் 290 பேர் க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைகளில் சித்தி பெறாதவர்கள் என்று மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து தெரியவந்துள்ளதாக, ஊவா மாகாண சிறுவர் அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் டி.எம்.சி. திசாநாயக்க கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ஊவா மாகாண முன்பள்ளிகளில் 35 ஆயிரம் சிறார்கள் கல்வி கற்று வருகின்றனர். 2ஆயிரத்து 549 ஆசிரியைகள் கல்வி கற்பிக்கும் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் மொழி மூலமான முன்பள்ளிகளில் 4ஆயிரத்து 462 சிறார்கள் தமிழ் மொழியில் கல்வி கற்று வருகின்றனர்.
பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் 160 உள்ளன.

இந்நிலையங்களில் 1983 பேர் டிப்ளோமா தரமுள்ள ஆசிரியைகளாவர். 566 பேர் டிப்ளோமா தரமற்றவர்களாவர். க.பொ.த. சாதாரண தர சித்தி பெறாதவர்கள் 290 ஆசிரியைகளும் இருந்து வருகின்றனர்.
மேலும், பொது இடங்களில் இருந்து வரும் 260 முன்பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லாதுள்ளன.

ஒருசில முன்பள்ளிகளின் கட்டிடங்கள் உடைந்த நிலையிலும் காணப்படுகின்றனவென்றும், மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளன.
இதுவிடயம் தொடர்பாக கல்வி அமைச்சிற்கும் அறிவித்துள்ளேன். ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்திற்கமைய முன்பள்ளிகளில் கடமையாற்றும் ஆசிரியைகளுக்கு நியாயமான கொடுப்பனவுகள் வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அத்துடன், அனைத்து முன்பள்ளிகளிலும் பொதுவானதொரு வேலைத்திட்டமொன்றிற்கமைய பாடநெறியொன்றையும் அறிமுகப்படுத்தவேண்டுமென்று கல்வி அமைச்சிற்கு யோசனையொன்றையும் முன்வைத்துள்ளேன்” என்றும் கூறினார்.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles