மெதிரிகிரிய பகுதியிலுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை மையமொன்றில் குடிபோதையில் கடமையாற்றிய மண்டபப் பொறுப்பதிகாரி (Supervisor) மற்றும் உதவி இணைப்பாளர் (Assistant Coordinating Officer) ஆகியோர் உடனடி அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளனர்.
வடமத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ. சமரகோன் இது குறித்துத் தெரிவிக்கையில், பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருவர் அதிபர் என்றும், மற்றவர் ஹிங்குராக்கொட கல்வி வலையத்தைச் சேர்ந்த ஆசிரியர் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.
பரீட்சைகள் திணைக்களத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் குழுவொன்று திடீர் சோதனையை மேற்கொண்டபோதே இவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்தது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக பரீட்சை மையக் கடமைகளிலிருந்து நீக்கப்பட்டனர்.
தற்போது இது தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.










