‘மக்கள் படை என் பக்கமே – அரசியல் கோழைகளுக்கு 5 ஆம் திகதி பதிலடி’

” மக்கள் மத்தியில் எனக்கான ஆதரவு பெருகிவருவதால் –  தோல்வி பீதியில் தொடை நடுங்கிபோயுள்ள சிலரே , கைக்கூலிகளை ஏவிவிட்டு, கோழைகள்போல் மறைந்திருத்து தாக்குதல் நடத்துகின்றனர். மக்கள் படை என் பக்கமே நிற்கின்றது. எனவே, ஆகஸ்ட் 5 ஆம் திகதி வாக்குரிமை என்ற ஆயுதத்தின் ஊடாக தக்கபதிலடி கொடுக்கப்படும்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபு தெரிவித்தார்.

புரட்டொப் பகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவிட்டு புஸல்லாவை நோக்கி பயணிக்கையில் பிரபுவின் வாகனம்மீது, ஒளிந்திருந்த சிலர் கற்களைவீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள முத்தையா பிரபு, தேர்தல் ஆணைக்குழுவிடமும், பாதுகாப்பு தரப்புகளிடமும் முறைப்பாடு செய்துள்ளார்.

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நேரடி வேட்பாளராகவே நான் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுகின்றேன். அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான அபிவிருத்தி திட்டங்களை கொண்டுவருவதே எனது இலக்காகும்.

இதனை முன்னிலைப்படுத்தியே பிரச்சாரத்திலும் ஈடுபட்டுவருகின்றேன். ஏனையோர்போல போலி வாக்குறுதிகளை வழங்கவில்லை.
இதனால் மக்கள் மத்தியில் எனக்கான ஆதரவு பெருகிவருகின்றது. இந்நிலையில் தோல்விபீதியில் இருக்கும் சில வேட்பாளர்கள், வன்முறை, அடாவடிமூலம் எனது பயணத்தை தடுப்பதற்கு முயற்சிக்கின்றனர்.

மறைந்திருந்து தாக்குகின்றனர். எனது வெற்றி உறுதி என்பதாலேயே இப்படியெல்லாம் செயற்படுகின்றனர்.

நாம் நாகரீகமான அரசியல் கலாச்சாரத்தை விரும்புபவர்கள். வன்முறையை விரும்புவதில்லை. எனவே, என்னுடைய அரசியல் களத்தில் மோதுவதாக இருந்தால், கொள்கைகளை முன்வையுங்கள். விவாதிப்போம். அதனைவிடுத்து மறைந்திருந்து கோழைகள்போல செயற்படவேண்டாம். மக்கள் ஆகஸ்ட் 5 ஆம் திகதி பதிலடி கொடுப்பார்கள்,’ – என்று முத்தையா பிரபு தெரிவித்தார்.

Related Articles

Latest Articles