” ஒற்றையாட்சிக்குள் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் அதிகாரங்களைப்பகிர்வதே சஜித் பிரேமதாசவின் நிலைப்பாடாக இருக்கின்றது. மாறாக பிரதமர் மஹிந்த ராஜபக்சகூறுவதுபோல் நாட்டை பிளவுபடுத்தும் எந்தவொரு நோக்கமும் இல்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் விடுக்கப்பட்டிருந்த விசேட அறிக்கைக்கு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” அதிகாரப்பகிர்வு தொடர்பான தனது நிலைப்பாட்டை சஜித் பிரேமதாச மிகவும் தெளிவாக அறிவித்துள்ளார். அதாவது ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களை பகிர்வதே அவரின் வேலைத்திட்டமாக இருக்கின்றது. எனவே, நாட்டை பிளவுபடுத்தும் செயலையோ அல்லது பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையையே அவர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் என்பது அரசியலமைப்பில் உள்ள விடயமாகும். அதனை அமுல்படுத்துவனை சட்டவிரோத நடவடிக்கையாக கருதமுடியாது. எனவே, மாகாணசபைகள் சுதந்திரமாக இயங்குவதற்கு உள்ள தடைகள் நீக்கப்படவேண்டும். அதனை இந்த அரசாங்கம் செய்திருக்கலாம். அதனைசெய்யாமல் எம்மை நோக்கி விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது. அது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல.” – என்றார்.