“ ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. விசாரணைகள் தொடரும். இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல.”- என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கம்பஹாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ ஊழல்வாதிகளுக்கு சட்டத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடுத்த மூன்றாண்களும் தொடரும். அடுத்த ஆட்சி தவணை முறையிலும் முன்னெடுக்கப்படும்.
சில சம்பவங்கள் தொடர்பில் பரந்தப்பட்ட விசாரணை அவசியம். சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது. காலம் எடுக்கும், ஆனால் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது. எங்களுக்கு எவரையும் பழிவாங்கும் நோக்கம் கிடையாது. அவர்களுடன் தனிப்பட்ட ரீதியில் எவ்வித பிரச்சினையும் கிடையாது.
ஆனால் பழிவாங்கப்பட அரசியல் கதையும் எங்களுக்கு தெரியும். 2010 இல் பொன்சேகாவுக்கு என்ன நடந்தது? அதுதான் பழிவாங்கல்.
2020 ஜனாதிபதி தேர்தலில் வென்ற பிறகு சிஐடியில் 600 பேருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டது. பிரதமரை நியமிப்பதற்கு முன்னரே சிஐடி பணிப்பாளரை ஜனாதிபதி நீக்கினார். இப்படியான செயல்பாடுதான் பழிவாங்கலாகும்.
எம்மிடம் பழிவாங்கல் கிடையாது. தவறிழைத்தவர்கள், ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தண்டனையை எதிர்கொள்ள வேண்டும். அரச நிறுவனங்களுக்கு சுயாதீனம் வழங்கப்பட்டுள்ளது. தேவையான வளங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய நடவடிக்கை இடம்பெறுகின்றது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம். பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் இந்நாட்டில் இருந்து முற்றாக அகற்றப்படும்.” – என்றார் ஜனாதிபதி அநுர.
