மத்திய கிழக்கு போர்ச்சூழலை அடிப்படையாகக்கொண்டு இலங்கையில் அவசரகாலச்சட்டம் நீடிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் தெரிவித்தார்.
அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“அத்தியாவசிய சேவைகள் மக்களுக்கு தடையின்றி கிடைக்கப்பெறவேண்டும். மக்களுக்கு இதனை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமையாகும். அதற்காக அவசரகாலச்சட்டம் நீடிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தேசிய மக்கள் சக்தியினர் எதிரணியில் இருந்தபோது, அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை எதிர்த்திருந்தார்கள்.
ஆனால் தற்போது அச்சட்டம் நீடிக்கப்படுகின்றது. எனவே, அச்சட்டம் நீடிக்கப்படுவதை நாம் ஏற்கவில்லை. அதனை கடுமையாக எதிர்க்கின்றோம்.
டித்வா புயல் உள்ளிட்ட காரணங்களைக்கூறி தொடர்ச்சியாக அவசரகாலச்சட்டம் நீடிக்கப்பட்டுவருகின்றது. தற்போத ஈரான், இஸ்ரேலில் போர் நடக்கின்றது என்பதைக் காரணங்காட்டி இங்கு அவசரகாலச்சட்டம் நீடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.” – என்றார் கவீந்திரன் கோடீஸ்வரன்.










