தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,750 ரூபாயாக அதிகரிப்பதற்கான வரலாற்று முக்கியத்துவமிக்க ஒப்பந்தம் இன்று காலை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் வைத்து கையெழுத்திடப்பட்டது.
2026 வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, தற்போது 1,350 ரூபாவாக காணப்படும் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 400 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த 400 ரூபா அதிகரிப்பில் 200 ரூபாவினை அந்தந்த பிராந்திய தோட்ட நிறுவனங்களும், மிகுதி 200 ரூபாவினை அரசாங்கமும் வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, தோட்டத் தொழிலாளர் ஒருவரின் நாளாந்த சம்பளம் 1,750 ரூபாயாக உயர்வடையும்.
தோட்ட நிறுவனங்கள் மற்றும் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்தப்பட்ட பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
ஜனவரி மாதம் தொழிலாளர்கள் பணிக்குச் சமூகமளித்த நாட்களின் அடிப்படையில், பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல் இந்த அதிகரிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படும்.
அரசாங்கம் வழங்கும் 200 ரூபா கொடுப்பனவை வைப்பிலிடுவதற்காகத் தொழிலாளர்களின் வங்கித் தகவல்கள் ஏற்கனவே திரட்டப்பட்டுள்ளன. பெப்ரவரி 03 ஆம் திகதியளவில் ஊழியர்களின் வருகைப் பதிவேடுகள் கிடைத்தவுடன்,
அரசாங்கத்தின் பங்களிப்புத் தொகையை நிறுவனங்களுக்கு விடுவிக்க அமைச்சு திட்டமிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தீர்மானத்தை ஒரு வரலாற்றுச் சாதனையாகக் கருதுவதாக பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் பொலியத்த குறிப்பிட்டார்.
இந்தச் சம்பள அதிகரிப்பால் தோட்ட நிறுவனங்களுக்கு 6 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மேலதிகச் செலவு ஏற்படும் என்றும், எனவே இத்தொழில்துறையை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் மற்றும் அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பதிவு – ஊடகவியலாளர் Parthiban Shanmuganathan
