அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பார்த்துக்கொள்வோம் – சவால் விடுக்கிறார் ரொஷான்

” ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரச்சினைக்கு இம்முறை தீர்வு காணப்படாவிட்டால், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அந்த பிரச்சினையை எப்படியும் முடிவுக்கு கொண்டுவருவோம்.” – என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று விசேட அறிவிப்பொன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” 69 லட்சம்பேரின் ஆணையுடன்தான் நான் அமைச்சரவையில் இருக்கின்றேன். ஜனாதிபதி நினைத்தால் என்னை நீக்க முடியும். இந்த நாடு வங்குரோத்து அடைய பல காரணங்கள் உள்ளன. அரசியல்வாதிகளும் இதற்கு காரணம். தொப்பி அளவானவர்கள் அதனை போட்டுக்கொள்ளலாம்.

ஆசியாவின் சொர்க்கபூமியாக இருந்த இலங்கை கள்வர்களின் பூமியாக மாறியுள்ளது. என்னை கொலை செய்யலாம். நடுவீதியில் வைத்து கொல்லலாம். அது இன்றையா அல்லது நாளையா என தெரியாது. இடைக்கால குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதி வேண்டுமாம். இவ்வாறு பழிவாங்க முற்படக்கூடாது.

என்னையும், எனது நிறுவனங்களையும் வீழ்த்துவதற்கு அரசியல் நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகின்றது. நிறைவேற்று அதிகார தலையீடும் இருப்பது கவலையளிக்கின்றது. எனக்கு வாழும் உரிமையை வழங்குங்கள். வேறு எந்த நாட்டிலும் தஞ்சம் அடையும் எண்ணம் கிடையாது. சாகல ரத்னாயவுக்கு எஸ்.டி.எப். பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எனக்கு அவ்வாறு இல்லை.

இந்த கிரிக்கெட் பிரச்சினை தீர வேண்டும். இல்லையேல் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தீர்ப்போம். பிரச்சினை முடிய வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. ஊழல், மோசடி கும்பல் வீட்டுக்கு செல்ல வேண்டும்.” – என்றார்.

( நாடாளுமன்றத்தில் இவ்வாறு நேற்று ரொஷான் ரணசிங்க உரையாற்றி சில மணிநேரங்களில் அமைச்சரவையில் இருந்து அவர் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.)

Related Articles

Latest Articles