அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது அயர்லாந்து – மண்டியிட்டது தென்னாபிரிக்கா

தென் ஆப்பிரிக்கா அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி டப்ளினில் நேற்று நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய அயர்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஆன்ட்ரூ பால்பிர்னி சிறப்பாக ஆடி சதமடித்து 102 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹாரி டெக்டார் 79 ரன்னில் அவுட்டானார்.

இதையடுத்து 291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மார்கிராம் பொறுப்புடன் ஆடி 84 ரன்கள் எடுத்தார். அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வான் டெர் டுசன் 49 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் நிலைக்கவில்லை.

இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 48.3 ஓவரில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் அயர்லாந்து அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என அயர்லாந்து முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது ஆன்ட்ரூ பால்பிர்னிக்கு வழங்கப்பட்டது.

இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Related Articles

Latest Articles