ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபாலடி சில்வா அணியினரும், புதிய கூட்டணி தரப்பினரும் இணைந்து “பொதுஜன ஐக்கிய முன்னணி” யாக அரசியல் பயணத்தை தொடர்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.
பொதுஜன ஐக்கிய முன்னணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவித்தல் இன்று (14) வெளியிடப்பட்டது.
முன்னணியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும், செயலாளராக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவும், பொருளாளராக இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவும் செயற்படவுள்ளனர்.
அத்துடன், தலைமைத்துவ சபையொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர, உட்பட 21 பேர் தலைமைத்துவ சபையில் இடம்பெற்றுள்ளனர். இந்த கூட்டணியில் சுமார் 30 வரையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகவே பொதுஜன ஐக்கிய முன்னணி செயற்படவுள்ளது.
கூட்டணியின் சின்னமாக கதிரை சின்னம் விளங்கும்.
(இந்த கதிரை சின்னத்துக்கென அரசியல் கதையொன்று உள்ளது. ஏற்கனவே எழுதப்பட்ட பதிவு சிறு திருத்தங்களுடன் மீள வழங்கப்படுகின்றது.)
1970 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இடதுசாரி கட்சிகளையும் இணைத்துக்கொண்டு களமிறங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெற்றியை பதிவு செய்து, அரியணையேறியது.
எனினும், 1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அந்த வெற்றியின் பின்னரே இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையுடன் புதிய அரசமைப்பு இயற்றப்பட்டது.
அதன்பின்னர் 1982 இல் நடைபெற்ற இலங்கையின் முதலாவது ஜனாதிபதித் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றி நடைபோட்டது.
சுதந்திரக்கட்சி ஆட்சியில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் ஐதேகவின் அரசியல் பலம் உள்ளிட்ட காரணிகளால் சுதந்திரக் கட்சியால் மீண்டெழ முடியுமா என அரசியல் ரீதியில் அச்சம் ஏற்பட்டது. 1988 இல் நடைபெற்ற 2 ஆவது ஜனாதிபதி தேர்தலிலும் கை சின்னத்தில் களமிறங்கிய சுதந்திரக்கட்சி பின்னடைவை சந்தித்தது.
1977 இற்கு பின்னர் 1989 இலேயே பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. (சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி நாடாளுமன்ற ஆட்சிகாலத்தை மேலும் ஒரு தவணைக்கு நீடித்துக்கொள்வதற்கு ஜே.ஆர். ஜயவர்தன நடவடிக்கை எடுத்திருந்தார்.)
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே 1994 ஆகஸ்ட் 16 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிக்கா அம்மையார் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் கூட்டணியாக கதிரை சின்னத்தில் களமிறங்கியது.
( அதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் கை சின்னத்திலேயே அக்கட்சி தனித்து – கூட்டணியாக களமிறங்கியது)
இத்தேர்தலில் மக்கள் கூட்டணி (கதிரை சின்னம்) வெற்றிபெற்றது, ஐ.தே.கவின் 17 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவுகட்டப்பட்டது. சுதந்திரக் கட்சி மீண்டும் தலை தூக்கியது.
மக்கள் கூட்டணியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் களமிறங்கிய அதன் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 4 இலட்சத்து 64 ஆயிரத்து 58 விருப்பு வாக்குகளைப்பெற்று வரலாற்று வெற்றியை பதிவு செய்தார்.
இலங்கையில் விகிதாசார தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாக இது அமைந்திருந்தது. (2015 இல் இச்சாதனையை கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்க முறியடித்தார். ரணிலின் சாதனையை 2020 பொதுத்தேர்தலில் குருணாகலை மாவட்டத்தில் களமிறங்கிய மஹிந்த முறியடித்தார்.)
அதே ஆண்டு அதாவது 1994 நவம்பர் 9 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் கதிரை சின்னத்திலேயே சுதந்திரக்கட்சி, கூட்டணி அமைத்து போட்டியிட்டது. வெற்றியும் பெற்றது. இலங்கையில் முதலாவது நிறைவேற்று அதிகார பெண் ஜனாதிபதியை உருவாக்கிய தேர்தல் அது.
அதன்பின்னர் 2000, 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களிலும் கதிரை சின்னமே சுதந்திரக்கட்சிக்காக களத்துக்கு வந்தது.
அதன்பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் கதிரை சின்னம் களத்துக்கு வரவில்லை. மக்கள் கூட்டணிக்கு பதிலாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உதயமானது. வெற்றிலை சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.
( மக்கள் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சியாக தொடர்ந்து இருந்தது.)
2004 இற்கு பின்னர் அனைத்து தேர்தல்களிலும் சுதந்திரக்கட்சி வெற்றிலை சின்னத்திலேயே கூட்டணி அமைத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாக களமிறங்கியது.
2019 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியது. இதனால் அக்கட்சியின் வெற்றிலை சின்னமும் மாயமானது. மொட்டு சின்னம் ஆதிக்கம் செலுத்தியது. 2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போதும் மொட்டு கூட்டணியில் சுதந்திரக்கட்சி களமிறங்கினாலும் சில மாவட்டங்களில் கை சின்னத்தில் போட்டியிட்டது.
இம்முறை சுதந்திரக் கட்சி மூன்று அணிகளாக பிளவுபட்டுவருகின்றது. அதில் ஒரு அணியே நிமல் சிறிபாலடி சில்வா அணி, அந்த அணியில் இடம்பெற்றுள்ள லசந்த அழகியவன்னவே மக்கள் கூட்டணியின் செயலாளராக பதவி வகிக்கின்றார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இரு தசாப்தங்களுக்கு பிறகு ‘கதிரை’ சின்னத்துக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கூட்டணியின் கதிரை சின்னத்தைக் கொண்ட பொதுஜன ஐக்கிய முன்னணி உதயமாகியுள்ளது.
ஆர்.சனத்










