ஆசியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக வட மாகாணம் மாற்றப்படும் 

இவ்வருடத்திற்குள் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டு இளைஞர் யுவதிகளின் தொழில் பிரச்சினைத் தீர்க்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். அதேபோல், மீண்டும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்கும் வகையில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நவீன விவசாயத்தைக் கிராமத்திற்கு கொண்டுச் செல்வதற்கான வேலைத்திட்டம் அடுத்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கத்தில் நேற்று (24) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாழ். மாவட்ட மாநாட்டிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதன்போது யாழ்.மாவட்ட இளைஞர் யுவதிகளின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் நேரடியாக கூறுவதற்கான சந்தர்ப்பமும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்/ பணிப்பாளர் நாயகம் பசிந்து குணரத்னவும் கலந்துகொண்டிருந்தார். இதன்போது பிரதேச இளைஞர்களின் திறன் மற்றும் கலாசாரத் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்வுகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“வட. மகாணத்தில் பயன்படுத்தப்படாத பல காணிகள் காணப்படுகின்றன. யாழில் மாத்திரமின்றி முழு நாட்டிலும் அவ்வாறான பல காணிகள் காணப்படுகின்றன. அந்த இடங்கள் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் எமது நாட்டில் விவசாய ஏற்றுமதி காணப்பட்டது. அநுராதபுர காலத்தில் இலங்கை நெல் ஏற்றுமதி செய்தது. பின்னர், தேயிலை, கோபி, இறப்பர், கறுவா உள்ளிட்டவைகளும் ஏற்றுமதி செய்யப்பட்டன. தற்போது அந்த ஏற்றுமதிச் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளன.

அதனால், விவசாயத்தை நவீனமயப்படுத்தி ஏற்றுமதி பொருளாதாரத்தை மீண்டும் உருவாக்க வேண்டும். இளைஞர் யுவதிகள் விவசாயத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். அரச மற்றும் தனியார் துறையுடன் இணைந்து நவீன விவசாயத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறோம். அதனால் இலங்கை டொலர்களை ஈட்டிக்கொள்வதற்கான வாய்ப்பும் அதிகமாக கிடைக்கும். கடந்த வாரம் கேகாலைக்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தேன். அங்கு நவீன விவசாயச் செயற்பாடுகளை முன்னெடுப்போரை காண முடிந்தது. தற்போது அவ்வாறானவர்களே எமக்குத் தேவைப்படுகின்றனர்.

நவீன விவசாயத்தில் 5000 சதுர அடியில் உயர் வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும். ஒரு ஹெக்டயாரில் 08 மெட்ரிக் டொன் நெல் விளைச்சலை பெற்றுக்கொள்ள முடியும். அதனால் ஏற்றுமதி மற்றும் வீழ்ச்சியடையாத பொருளாதாரத்தையும் கட்டமைக்க முடியும்.

அதேபோல் சுற்றுலா வர்த்தகத்தை பலப்படுத்துவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. அதேபோல் வலுசக்தி குறித்தும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. கிளிநொச்சி, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் மூலமான மின்சார உற்பத்தியை செய்வதற்கான சாத்தியங்களும் உள்ளன. அதனால் கிகாவோட் அளவிலான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். குளங்கள் மீது சூரிய சக்தி படலத்தை அமைத்து அதனூடாக மின்சாரம் தயாரிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்துகிறோம்.

இதற்காக பூநகரி மற்றும் இரணைமடு குளங்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வடமாகாணமானது அதிகளவில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. மேலும், இந்தப் பகுதியில் 700 மெகாவோட் திறன் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய சூரிய சக்திப் படலத்தை நிறுவும் பணியை மேற்கொள்ளவிருக்கிறோம். இதனை ஆரம்பமாகக் கொண்டு ஆசியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக வடக்கை மாற்ற முடியும். வலுசக்தி துறையின் முன்னேறிச் செல்ல அதிகளவில் மின் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

எனவே, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்திக்காக இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தை மையமாக கொண்டு முதலீட்டு வலயம் ஒன்று நிறுவப்பட உள்ளது. மாங்குளம் பிரதேசத்தில் முதலீட்டு வலயமொன்றை ஸ்தாபிப்பதற்கும் எதிர்பார்க்கிறோம். மீனவர்களுக்காக நமது கடற்பரப்பை பாதுகாக்கும் பொறுப்பு எமக்கு உள்ளது. நவீன மீன்பிடி முறைகள் மூலம் மீன்பிடித் தொழில் துறையும் பலப்படுத்தப்படும்.

கடந்த நான்கு வருடங்களில் இலங்கையின் பொருளாதாரம் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. மக்கள் பெரும் அவதிப்பட்டனர். தற்போது நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வருகிறது. நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்ட பிறகு, இளைஞர்களின் தொழில் இல்லாத பிரச்சினை நிவர்த்திக்கப்படும்.

பொருளாதார மாற்றச் சட்டமூலம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்க எதிர்பார்த்திருக்கிறோம். வியட்நாம், மலேசியா, தாய்லாந்து போன்ற ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் இலங்கையிலும் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

மேலும், உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க இன்னும் இரண்டு மாதங்களில் தென்னிந்திய கலைஞர்களை கொண்டு யாழ்ப்பாணத்தில் மாபெரும் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுமாறு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவருக்கு அறிவுறுத்தியிருக்கிறேன். வங்குரோத்து பொருளாதாரத்தில் இருந்து நாட்டை மீட்டெடுக்கவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிக்கும்.

இங்கு இளைஞர்கள் எழுப்பிய சில கேள்விகளும் அதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அளித்த பதில்களும் வருமாறு,

கேள்வி – வடக்கில் குடிநீர் தட்டுப்பாடு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், அதற்கான தீர்வை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

பதில் – வடக்கில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கடல் நீரை சுத்தப்படுத்தும் புதிய திட்டத்தை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது. அதற்கான Desalination Project திட்டம் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படும். வடமாகாணத்தில் ஒரு காலத்தில் தண்ணீர் அதிகளவில் கிடைக்கும், அதேபோல் சில நேரங்களில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையை எப்படி எதிர்கொள்கிறோம் என்று பார்க்க வேண்டும். இந்தப் பிரச்சினை வடக்கில் மட்டுமல்ல. தெற்கின் சில பகுதிகளும் உள்ளன. எமக்குக் கிடைத்துள்ள அறிக்கைகளின்படி 2050ஆம் ஆண்டுக்குள் வறண்ட பிரதேசத்தில் மழை குறையும். ஈர வலயங்களில் மழை அதிகரிக்கும். இதற்கு தீர்வு காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம். காலநிலை பிரச்சினைகள் உலகின் பல நாடுகளில் உள்ளன.

கேள்வி -வேலையில்லாத் திண்டாட்டத்தினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதால், சுயதொழில் செய்வதற்கு வட்டியில்லா கடன் திட்டத்தை அறிமுகப்படுத்த முடியுமா?

பதில் – வேலையில்லாத் திண்டாட்டம் யாழ்ப்பாணத்தில் மாத்திரமன்றி முழு நாட்டினதும் பிரச்சினையாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால், தொழில்களுக்கான ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை. இவ்வருடத்திற்குள் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீட்கப்படும் என நம்புகிறோம். அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்கனவே ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. நாட்டின் வளர்ச்சியில், ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்ற வேண்டும். அடுத்த 5-10 ஆண்டுகளில் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும். அதற்கான சட்டங்கள் ஜூன்-ஜூலை மாதங்களில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். கடந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரம் எதிர்மறையாக இருந்தது. ஆனால், 2024ல் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்ட பின்னர் வங்கி முறை மூலம் சலுகைக் கடன் வழங்க நடவடிக்கை எடுப்போம்.

பிரச்சினை – உலக அளவில் பிரபல வர்த்தகரான எலோன் மஸ்க் இலங்கைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இது இளைஞர்களுக்கு எவ்வாறு பயனளிக்கும்?

பதில் – உலகளாவிய “Starlink” வலையமைப்பை இலங்கையுடன் இணைப்பது பற்றி எலோன் மஸ்க்குடன் கலந்துரையாடினேன். “Starlink” மூலம், கொழும்புக்கு வெளியே உள்ள Wi-Fi பிரச்சினை நிவர்த்திக்கப்படும். மேலும், நமது நாட்டின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி குறித்தும் அவருடன் ஆலோசித்தேன். அது குறித்த முக்கியமான திட்டங்களை செயல்படுத்த இந்த நாட்டுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தேன். மேலும், “Starlink” வலையமைப்பு குறித்து ஆராயுமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன. இதற்காக பாதுகாப்பு அமைச்சின் கருத்துகளை அறியவேண்டியுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் பி. எம். எஸ். சார்ள்ஸ், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்/ பணிப்பாளர் நாயகம் பசிந்து குணரத்ன உட்பட பெருமளவான இளைஞர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles