தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாவை உறுதிசெய்த அரசாங்கத்திற்கு பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை பின்வருமாறு
மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் முன்வைத்த ,தோட்ட தொழிலாளர்களின் நாள் சம்பளம் 1000 ரூபாய் என்ற முன்மொழிவை அரச வர்த்தமானியின் ஊடாக உறுதி செய்தமைக்கு அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, மாண்புமிகு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, தொழில் அமைச்சர் கௌரவ நிமால் சிறிபாலடி சில்வா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.
ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் அயராத முயற்சியின் பலன் இன்று வெற்றியாகியுள்ளது.
கடந்த காலங்களில் காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டம்,தோட்ட தொழிலாளர்களின் போராட்டம், ஊடகங்களின் விழிப்புணர்வு செயற்பாடுகள் ,சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட சாதகமான விடயங்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்களின் நேரடி,மறைமுக ஒத்துழைப்பு என்பன கம்பனிகளுக்கு பாரிய அழுத்ததை வழங்கியது.
அவ்வாறு பல்வேறு தரப்பினர்களினால் வழங்கப்பட்ட அழுத்ததிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆரம்பம் முதல் இன்று வரை பல்வேறு காலக்கட்டங்களில் பல போராட்டங்களை முன்னெடுத்தது. எந்த ஒரு போராட்டமும் தோல்வி அடைந்ததாக சரித்திரம் இல்லை.
எனவே தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள உயர்விற்கு வலு சேர்த்த அனைவருக்கு மீண்டும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்.
எதிர்காலங்களில் தொடர்ந்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்களுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் போராடும்.
– செந்தில் தொண்டமான்
உபதலைவர் – இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்,
பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர்