நாடு தினம் தினம் மோசமான நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவு பொருளாதார சுமைகள் அதிகரித்துள்ளன. இதனை முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதியும் அமைச்சரவையும் உடனடியாக இராஜனாமா செய்வதை தவிர வேறு வழியே இல்லையென ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,
நாட்டில் எங்கு பார்த்தாலும் அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டமே நடைபெற்று வருகிறது. மக்கள் போராட்டத்தை அரசாங்கத்தால் சகித்துக்கொள்ள முடியாது போயுள்ளமையால் இன்று ஆயுத பலத்தை பிரயோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதனால்தான் ரம்புக்கணையில் அப்பாவி இளைஞர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிசூட்டில் பலியாகியுள்ளார். இதற்கு ஜனாதிபதியும் அமைச்சரவையும் பொறுப்புக்கூறியே ஆகவேண்டும்.
தொடந்து எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதால் ஆட்டோ , பஸ் கட்டணம் முதல் அனைத்து துறைகளிலும் இது தாக்கம் செலுத்துகிறது. கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பாண் உட்பட பேக்கிரி பொருட்களின் விலைகளும் பாரிய அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் எவ்வித கட்டுப்பாடுமின்றி அதிகரிக்கப்பட்டு வருகின்றன. தோட்ட மக்கள் உட்பட சாதாரண மக்களின் வாழ்க்கையில் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி ஜனநாயகத்துக்கு மதிப்பளிப்பவர் என்றால் தோல்வியை ஒத்துக்கொண்டு வீட்டுக்கு செல்வதே சரியான தீர்மானமாக அமையும். அதிகார பேராசையால் அவர் தொடர்ந்து அடம்பிடித்து வந்தால் நாட்டு மக்கள்தான் அதனால் பாதிக்க போகின்றனர். எனவே நாட்டை வழிநடத்தக்கூடிய தரப்பிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு செல்லுமாறு தயவுடன் ஜாபதிபதியிடம் கோருகிறேன் என்றார்.