ஆளுங்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அதிருப்தியில்!

அரசின் செயற்பாடுகள் தொடர்பில் ஆளுங்கட்சியிலுள்ள மூத்த அரசியல்வாதிகள் சிலர் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.  சாதகமான பல வழிமுறைகள் இருந்தும், மீண்டும் – மீண்டும் நெருக்கடிக்குள் சிக்கும் விதத்தில் அரச மேல் மட்டம் முடிவுகளை எடுப்பதாலும், சில உறுப்பினர்கள் பொறுப்பற்ற விதத்தில் கருத்துகளை வெளியிட்டுவருவதாலும், மேலும் சில காரணங்களாலுமே அவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என அறியமுடிகின்றது.

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சந்திர வீரக்கொடி ஆகியோர் தற்போது அரசை வெளிப்படையாகவே விமர்சித்துவருகின்றனர். மேலும் சில இன்னும் வெளிப்படையாக விமர்சனக் கணைகளைத் தொடுக்காவிட்டாலும், தமக்கு நெருக்கமானவர்களிடம் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்திவருகின்றனர்.

பங்காளிக்கட்சித் தலைவர்களும், உறுப்பினர்களும் அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்துவரும் நிலையில்,  மொட்டு கட்சியிலுள்ள மூத்த உறுப்பினர்களும் தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளமை தெற்கு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஆளுங்கட்சிலிருந்து 40 பேர் வெளியேறத் தயாராகிவருகின்றனர் என்ற தகவலை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

உடனடியாக இவர்கள் அரசிலிருந்து வெளியேறாவிட்டாலும்கூட தக்க தருணம்வரும்போது அதிரடியான நகர்வுகளை கையாளக்கூடும் எனவும் தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles