ஆஸி வீரரின் மகளுக்கு ஜெர்சியை பரிசாக வழங்கிய கோஹ்லி

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் வார்னரின் மகளுக்கு, விராட் கோஹ்லி தனது ஜெர்சியை பரிசாக அளித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடர் மற்றும் டி20 தொடரை வென்ற உற்சாகத்துடன் நாடு திரும்பியது. நாடு திரும்பிய வீரர்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதற்கிடையே தனது மனைவியின் பிரசவத்திற்காக முதல் டெஸ்ட் போட்டியுடன் இந்தியா திரும்பிய விராட் கோஹ்லி, வார்னரின் மகளுக்கு தனது ஜெர்சியை பரிசாக அளித்துள்ளார்.

கோஹ்லி கையெழுத்திட்ட அந்த ஜெர்சியுடன், சிரித்தபடி போஸ் கொடுத்திருக்கிறாள் வார்னரின் மகள் இண்டி. இந்த புகைப்படத்தை வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

‘இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நாங்கள் தோல்வி அடைந்தாலும், இந்திய கேப்டன் விராட் கோஹ்லி எனது மகளுக்கு கொடுத்த மறக்க முடியாத பரிசை நான் ஞாபகம் வைத்திருக்கிறேன். என் மகள் இண்டி மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். கோஹ்லி, உங்கள் ஜெர்சியை கொடுத்தமைக்கு நன்றி. அந்த ஜெர்சி இண்டிக்கு மிகவும் பிடித்துள்ளது. என்னையும் ஆரோன் பிஞ்சையும் தவிர கோஹ்லியும் என் மகளுக்கு மிகவும் பிடித்தமானவர்.” என வார்னர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles