இந்திய மீனவர்களின் அத்துமீறலை முற்று முழுதாக தடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும், மன்னார் மாவட்டத்துக்குரிய மீன்பிடி துறைமுகம் பேசாலையில் அமைய உள்ளது எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் மன்னார் மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 24.06.2025 இன்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது பற்றியும் பேசப்பட்டது. அதற்குரிய நடவடிக்கையை கடற்படையினர் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.”- எனவும் அமைச்சர் கூறினார்.
மன்னார் மாவட்டத்துக்கென துறைமுகமொன்று கிடையாது. எனவே, பேசாலையில் துறைமுகமொன்றை அமைப்பதற்கு திட்டமிட்டு, அதற்குரிய நடவடிக்கை இடம்பெறுகின்றது. எனினும், குறித்த துறைமுகம் தொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது. அந்த சந்தேகத்தை நாம் நீக்க வேண்டும். அரசாங்க அதிபர், அதிகாரிகள் உள்ளிட்டோர் மக்களை சந்தித்து கலந்துரையாடி, துறைமுகத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கமளிக்க வேண்டும்.
அதேவேளை, இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு தொடர்பிலும் பேசப்பட்டது. இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்துமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்தார்கள். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு கடற்படையினரும் உரிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர். எதிர்காலத்தில் இந்திய மீனவர்களின் வருகையை முற்று முழுமையாக நிறுத்த முடியும் என நம்புகின்றோம். இராஜதந்திர மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.” – என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் குறிப்பிட்டார்.
