தனது முதல் லீக் போட்டியை வெற்றியுடன் தொடங்கும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று அயர்லாந்தை எதிர்கொள்கிறது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் 8-வது லீக்கில் இந்திய அணி, அயர்லாந்தை (ஏ பிரிவு) சந்திக்கிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோஹ்லி, ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா என்று அனைத்து முன்னணி வீரர்களும் இருப்பதால் வலுவாக காணப்படுகிறது.
அயர்லாந்து சிறிய அணியாக கருதப்பட்டாலும், முந்தைய காலங்களில் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து இருக்கிறது. அதனால் அவர்களை துளி கூட சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று இந்திய வீரர்களை அணி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
போட்டி நடக்கும் நியூயார்க்கில் உள்ள ஆடுகளங்கள் செயற்கையாக அமைக்கப்பட்டவை. இந்த ஆடுகளத்தில் அதிரடி காட்டுவது அவ்வளவு எளிதல்ல. இதே மைதானத்தில் ஆடிய இலங்கை தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெறும் 77 ஓட்டங்களுடன் அடங்கியதே அதற்கு உதாரணம்.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை மோதியுள்ளன. 7 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.