” உங்கள் அனுபவத்தை பயன்படுத்த இதுதான் வேளை. நல்ல தருணம். பிரிபடாத இலங்கைக்குள் நிரந்தர தீர்வை அடைய எமக்கு உதவுங்கள்.” என்று இலங்கை வந்துள்ள எரிக் சொல்ஹெயிமிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனை, இலங்கை வந்துள்ள எரிக் சொல்ஹெயிம் சந்தித்தார். மனோ கணேசனின் இல்லத்தில் நிகழ்ந்த இச்சந்திப்பில் தமுகூ நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமாரும் கலந்துக்கொண்டார்.
இது தொடர்பில் மனோ கணேசன் கூறியவை வருமாறு,
” வரலாற்றில் எல்லோரும் தவறிழைத்துள்ளோம். கடைசி சமாதான முயற்சி தோற்றது. இதற்கு சில தரப்புகளோ, அனைத்து தரப்புகளுமோ காரணம். அதுபற்றி ஆராய்ச்சி செய்ய இது வேளையல்ல. அது எனது வேலையுமல்ல. இப்போது நாம் வரலாற்றில் இருந்து பாடம் படித்துள்ளோம். ஆகவே முன்னோக்கி நகர எமக்கு உதவுங்கள்.
இங்கே நண்பர் எரிக் சொல்ஹெயிம் கூறியதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எரிக் சொல்ஹெயிம் இலங்கையில் மிகவும் அறியப்பட்ட ஒரு வெளிநாட்டுக்காரர். அவரது தொடர்புகளையும், அனுபவத்தையும் பயன்படுத்த இதுதான் வேளை. பிரிபடாத இலங்கைக்குள் நிரந்தர தீர்வை அடைய எமக்கு உதவுங்கள். உங்கள் நண்பர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இதை எடுத்து கூறுங்கள். இதை நீங்கள் செய்து இந்நாட்டின் இனப்பிரச்சினை தீர்வுக்கு உதவுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் நான் என் பிறந்த நாளை (இன்று) கொண்டாடுவேன்.
இலங்கையின் சமூக பரப்பில் ஏற்பட்டுள்ள புதிய வளர்ச்சி போக்கை நீங்கள் கவனிக்க வேண்டும். கடந்த காலங்களை விட இன்று இந்திய வம்சாவளி மலையக மக்கள் ஒரு இனமாக வளர்ச்சி அடைந்துள்ளார்கள். அவர்கள் பெருந்தோட்ட தொழிலாளர் மட்டுமே, அவர்களது பிரச்சினை பெருந்தோட்ட பிரச்சினைகள் மட்டுமே, என்ற காலம் மாறி விட்டது. இன்றைய இனப்பிரச்சினை தீர்வில் அவர்களுக்கும் சம பங்கு வேண்டும். வடகிழக்கு சகோதர உடன்பிறப்பு, முஸ்லிம் உடன்பிறப்பு மற்றும் சிங்கள உடன்பிறப்புகளுடன் நாம் சமமாக வாழ விரும்புகிறோம். இனிவரும் இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளில் இந்த புது வளர்ச்சி போக்கை கவனத்தில் கொள்ளுங்கள். ” – என்றார்.










