தனது இரண்டு கைகளையும், ஒரு காலையும் இழந்த மாணவி ஒருவர் 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் தோற்றி மூன்று A சித்திகளைப் பெற்றிருந்தார். ரஷ்மி நிமேஷா குணவர்த்தன என்ற மாணவியே இவ்வாறானதொரு சாதனையை படைத்துள்ளார்.
எஹெலியகொட தேசிய பாடசாலையில் கல்வி பயின்ற ரஷ்மி நிமேஷா தனது இடதுகாலால் பரீட்சை வினாத்தாள்களுக்கு விடை எழுதி இந்தத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
கடினமான சவால்களுக்கு மத்தியில் இந்த வெற்றியை அவர் எட்டியுள்ளார். உடல் குறைபாடு என்பது வெற்றிக்கான தடையல்ல என்று நிரூபித்துள்ளார் அம்மாணவி.
“அனைத்து வசதி வாய்ப்புகளும் கிடைக்கும் மாணவர்கள் பரீட்சையில் வெற்றி பெறுவது சாதனையல்ல. ஆனால் வறுமை, குடும்பத் துன்பங்கள் மற்றும் உடல் அங்கக் குறைபாடு ஆகியன கொண்ட மாணவர்கள் சவால்களைத் தாண்டி பரீட்சையில் வெற்றி பெறுவதுதான் சாதனை” என்று இம்மாணவியின் பரீட்சைப் பெறுபேற்றை அறிந்த கல்வியியலாளர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
“வேதனைகளை தாண்டி, தடைகளைத் தாண்டி, இயலாமைகளைத் தாண்டி வெற்றியீட்ட வேண்டும். பயத்தை ஆராதித்தால் அது எமது பயத்தினை தாண்டி பயணிக்க அனுமதிக்காது. பயத்தைப் பார்த்து எதிர்த்து நாம் கேள்வி கேட்க வேண்டும்” என்பதே வெற்றி வாசகம் ஆகும்.
மாணவி ரஷ்மி நிமேஷாவினால் எல்லாப் பிள்ளைகளையும் போன்று ஒடியாடி விளையாட முடியவில்லை. ஏனென்றால், அவளுக்கு இரண்டு கைகளும் ஒரு காலும் இல்லை.ஆனாலும் அவள் துவண்டு போகவில்லை. தனது இயலாமையை எண்ணி மனம் இடிந்து போகவில்லை. விதியை நொந்து சரிந்து போகவில்லை.
இரு கைகள் இல்லாவிட்டாலும், தனது இடது காலைப் பயன்படுத்தி உயர்தர பரீட்சை எழுதி 3 A சித்திகளை பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் இம்மாணவி. அனைத்து ஊடகங்களும் ரஷ்மி நிமேஷா குணவர்த்தனவின் வாசற்படியில் அவரின் பேட்டிக்காக காத்திருந்தன.
2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி பிறந்த ரஷ்மி நிமேஷா தெல்ஓய பாடசாலையில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்தார். 2012 ஆம் ஆண்டு 5 ஆம் தரம் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பின்னர் எஹேலியகொட தேசிய பாடசாலையில் மேலதிக கற்கை நெறியைத் தொடர்ந்தார்.
2016 ஆம் ஆண்டு நடந்த சாதாரண தர பரீட்சையில் 8A சித்திகளையும் 1 B சித்தியையும் பெற்றார். தற்போது க.பொ.த உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் 3 A சித்திகளைப் பெற்றுள்ளார்.
அதேவேளை இம்மாணவி 2017 ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற Global IT challenge 2017 super challenge போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.
தனது மகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ரஷ்மி நிமேஷாவின் தந்தை சரத் குணவர்த்தன “எனது மகளுக்கு உடல் குறைபாடுகள் இருந்த போதிலும், அனுதாபத்தை எதிர்பார்க்காமல் தனது திறமையால் வாழ்க்கையை வெற்றி கொள்வதற்கு மகளுக்கு தொடர்ந்து வழிகாட்டினேன்” என்று தெரிவித்துள்ளார்.
“தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் எனது இலக்கை நோக்கி நகர்ந்தேன். என்னால் முடியுமென்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் சாத்தியமில்லாத எந்த விடயங்களுமில்லை” என தனக்குள் ஒளிர்ந்து கொண்டிருக்கும் பிரகாசமான தன்னம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் ரஷ்மி நிமேஷா. இம்மாணவி தன்னம்பிக்கையின் ஒளிச்சுடர். சாதிக்க நினைப்பவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம்.
வாழ்வில் சாதிப்பதற்கு எதுவுமே தடையல்ல. வலிகள் உருவாகித்தான் புதிய வழிகள் பிறக்கின்றன. பூமியில் பாதை இல்லாவிட்டால் ஆகாயத்தில் நடந்து செல்ல முயற்சிக்க வேண்டும். பாதை இல்லையென்று இடிந்து போய் இருந்து விடாதே! நீ நடந்து சென்றால் அதுவே புதிய பாதை!
– இர்ஷாத் இமாமுதீன்-
