இரத்தினபுரியில் தமிழர்களின் காணிகளை கையகப்படுத்தும் பெரும்பான்மையினர் – ஆனந்தகுமார் ஆவேசம்

இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தனது கள பிரசார நடவடிக்கைகளை இன்று அதிரடியாக ஆரம்பித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தின் எல்லை பகுதியான பனில்கந்த பகுதிக்கு சென்ற எஸ்.ஆனந்தகுமார், மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

பனில்கந்த பகுதி மக்களுக்கு இதுவரை எந்தவித தீர்வையும் வழங்க தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தவறிவிட்டதாக அந்த பகுதி மக்கள் கவலை வெளியிட்டனர்.

இந்த நிலையில், தமக்கான குரலாக பிரதிநிதியொருவர் வருகைத்தந்ததை வரவேற்ற பனில்கந்த மக்கள், தமக்கான பிரச்சினைகளையும் எடுத்துரைத்தனர்.

விடயங்களை ஆராய்ந்த எஸ்.ஆனந்தகுமார், தீர்வு திட்டங்கள் நிறைவேற்றப்படும் விதத்தையும் மக்களுக்கு தெளிவூட்டியிருந்தார்.

இதையடுத்து, மக்கள் மத்தியில் உரையாற்றிய எஸ்.ஆனந்தகுமார், பெரும்பான்மை சமூகத்திற்கு மத்தியில் வாழும் சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பை தான் உறுதி செய்வதாக கூறினார்.

பல தசாப்த காலமாக தாம் விளையாடிய மைதானத்தை தற்போது பெரும்பான்மை சமூகம் தன்வசப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் குறிப்பிட்டிருந்தனர்.

மைதானத்தில் பெரும்பான்மை சமூகம் மரக்கன்றுகளை நட்டு, தமது மைதானத்தை கையகப்படுத்தி கொண்டுள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், லயின் வீட்டுத் திட்டங்களின் தற்போதைய நிலைமை தொடர்பிலும் மக்கள் எஸ்.ஆனந்தகுமாரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல எஸ்.ஆனந்தகுமார் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அதிகாரிகள் பெரும்பான்மை சமூகத்திற்கு ஆதரவாக கருத்துரைக்க ஆரம்பித்த நிலையில், எஸ்.ஆனந்தகுமார் அவேசப்பட்டு அதிகாரிகளை உரிய முறையில் செயற்படுமாறு வலியுறுத்தியிருந்தார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமது உரிமைகளை விட்டு கொடுக்க வேண்டாம் என கூறிய அவர், தமக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ள போராடுமாறும் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் உரிமைகளை இழந்த தமிழ் சமூகத்தின் பாதுகாப்பிற்காக போராடும் மக்களின் பின்புலத்தில் என்றும் தான் இருப்பதாக இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் உறுதியளித்தார்.

Related Articles

Latest Articles