அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள இலங்கை கிரிக்கெட் அணியுடனான ரி 20 தொடரில் விளையாடும் நோக்கில் தற்போது நடைபெற்று வருகின்ற பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி 20 தொடரிலிருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் விலகியுள்ளார்.
இம்முறை பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் குவாட்டா க்ளேடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடி வந்த கிறிஸ் கெய்ல், நேற்று தனது சொந்த நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
இலங்கையுடன் விளையாடவுள்ள மேற்கிந்த தீவுகள் அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல், இலங்கை அணியுடனான ரி 20 தொடரில் விளையாடுவதற்காக தற்போது நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி20 போட்டிகளிலிருந்து தற்காலிகமாக விலகி மேற்கிந்திய தீவுகள் நோக்கி பயணமாகியுள்ளார்.
பாகிஸ்தான் சுப்பர் லீக்கிலிருந்து வெளியேறியது தொடர்பில் கிறிஸ் கெய்ல் கருத்து தெரிவிக்கையில்,
“பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் ஆரம்ப கட்ட போட்டிகளில் இருந்து வெளியேறியது உண்மையில் கவலையளிக்கிறது. இந்தத் தொடர் முழுவதும் விளையாடுவதுதான் எனது எதிர்பார்ப்பாக இருந்தது. பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் ஆதிக்கத்தை கையில் எடுக்க வேண்டும் என்ற ஆசையுடன் தான் நான் இங்கு வந்தேன்.
இந்தத் தொடரின் இரண்டாவது கட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கு மீண்டும் பாகிஸ்தான் வருவதற்கு எதிர்பார்த்துள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
இம்முறை பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் குவாட்டா க்ளேடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடிய கிறிஸ் கெய்ல், அந்த அணிக்காக இரண்டு போட்டிகளில் விளையாடினார்.
இதில் கராச்சி கிங்ஸ் அணிக்கெதிராக நடைபெற்ற முதல் போட்டியில் 39 ஓட்டங்களையும், லாகூர் க்ளெண்டர்ஸ் அணியுடனான இரண்டாவது போட்டியில் 68 ஓட்டங்களையும் அதிரடியாக குவித்தார். எனினும், குறித்த இரண்டு போட்டிகளிலும் கிறிஸ் கெய்ல் விளையாடிய குவாட்டா க்ளேடியேட்டர்ஸ் அணி தோல்வியைத் தழுவியது.