இலங்கை இராணுவ தலைமையகத்தின் பாதுகாப்பை அரசாங்கம் மேலும் பலப்படுத்த வேண்டும். ஏவுகணை கட்டமைப்பையும் உருவாக்க வேண்டும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கைவிளக்க உரைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இலங்கையில் முப்படைகளின் தலைமையகமும் ஒரு இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. உலகில் வேறு நாடுகளில் இவ்வாறு அமைக்கப்படுவதில்லை. அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்ரகன்மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு உலக நாடுகள் இந்த நடைமுறையை மாற்றின. ஒரே இடத்தில் இருந்தால் இலக்குவைப்பதற்கு அது இலகுவாக அமைந்துவிடும்.
எனவே இலங்கையில் பாதுகாப்பு தலைமையகம் அமைந்துள்ள பகுதியை அரசாங்கம் பலப்படுத்த வேண்டும். ஏவுகணை கட்டமைப்பு, விமான தாக்குதல் ஆயுதங்கள் போன்றன கொண்டுவரப்படவேண்டும். எனவே, இது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்.
ஜனாதிபதியின் கொள்கை விளக்கஉரையில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. 7 வரிகள் மாத்திரமே உள்ளன. எனவே, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தாமல் அபிவிருத்தி இலக்கை அடையமுடியாது.” -என்றார்.










