தமிழக அரசு சார்பில் சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், இசைஞானி இளையராஜாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த 1975-ம் ஆண்டு தொடங்கிய இளையராஜாவின் இசைப்பயணம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தி சாதனை படைத்துள்ளார். அவரது சாதனைகளை பாராட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் ‘சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு-50 பாராட்டு விழா’ சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. விழாவில், இளையராஜாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், நினைவுப் பரிசு வழங்கினார்.
விழாவில் தலைமை உரை நிகழ்த்தி முதல்வர் பேசியதாவது: ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா. நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா. இசை எனும் தேனை உலகத்துக்கே தரும் இந்த தேனிக்காரரை பாராட்ட இங்கு கூடியிருக்கிறோம். அவர் கலைத்தாய்க்கு மட்டுமின்றி, தமிழ்த்தாய்க்கும் சொந்தமானவர். அதனால்தான், தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
பண்ணைபுரத்தில் இருந்து புறப்பட்ட இந்த மனிதர், திறமையும், உழைப்பும் இருந்தால், எப்பேர்ப்பட்ட உயரங்களையும் அடையலாம் என்று, அனைத்து மனிதர்களுக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறார். இவர் மொழிகள், நாடுகள், எல்லைகளைக் கடந்த ராஜா.
அனைத்து மக்களுக்குமானவர். இளையராஜாவை பற்றி, வலைதளத்தில் ஒருவர் எழுதிய சில வரிகளை சொல்ல விரும்புகிறேன். இளையராஜா மட்டும் இசையமைத்திருந்தால் திருக்குறளும் – நற்றிணையும் – புறநானூறும் – குறுந்தொகையும் – ஐங்குறுநூறும் – பதிற்றுப்பத்தும் – பரிபாடலும் – சிலப்பதிகாரமும் – எங்களுக்கு மனப்பாடம் ஆகியிருக்கும் என்று எழுதியிருந்தார். நானும் இதையேதான் தமிழ் ஆர்வலராக உங்களிடம் கோரிக்கையாக வைக்கிறேன். சங்கத்தமிழுக்கு, தமிழ் இலக்கியங்களுக்கு நீங்கள் இசையமைத்து சில ஆல்பங்களை வெளியிடவேண்டும்.
இசையால், நம் நெஞ்சங்களை ஆளும் இளையராஜாவுக்கு, எத்தனையோ புகழ் மகுடங்கள், பாராட்டு மாலைகள், பத்மபூஷண், பத்மவிபூஷண் போன்ற பட்டங்கள் இருந்தாலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்கிய ‘இசைஞானி’ பட்டம் அவரது பெயராகவே நிலைத்துவிட்டது.
இளையராஜா பெயரில் விருது:
இசைத்துறையில், ஆர்வத்துடன் சிறந்த இசையைப் படைக்கும் இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசின் சார்பில், இனி ஆண்டுதோறும் ‘இசைஞானி இளையராஜா’ பெயரில் விருது வழங்கப்படும். இசைத் துறையில் பல சாதனைகள் படைத்த, பல சிகரங்களை தொட்ட இசைஞானி இளையராஜாவுக்கு இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’விருது வழங்கப்பட வேண்டும் என்ற ஆவலை, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களின் சார்பில் தெரிவிக்க விரும்புகிறேன்.
இது நிச்சயம் நிறைவேறும் என்று நம்புகிறேன். உங்கள் பயணம் இன்னும் பல்லாண்டுகாலம் தொடர வேண்டும் என்று தமிழ் மக்களின் சார்பில் வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றினார். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக, இளையராஜா ஏற்புரை நிகழ்த்தினார்.
துரைமுருகன், கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடக்கமாக, இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருப்பம் தெரிவித்த பாடல்கள் பாடப்பட்டன. தொடர்ந்து இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடந்தது.