உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தன்மை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வத்திக்கான் வெளிவிவகார செயலாளர் இலங்கை வருகை தரவுள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் அல்லது செம்படம்பர் மாதம் அவர் இலங்கை வருவார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்னும் நீதி நிலைநாட்டப்படவில்லை என பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கருத்து வெளியிடும்போது நான் வத்திக்கானில் இருந்தேன். வத்திக்கானில் பாப்பரசருக்கு அடுத்த நிலையில் உள்ளவரை சந்திப்பதற்காகவே நான் சென்றிருந்தேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விரிவாக பேசப்பட்டது.
பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையை நாம் கோரினோம்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விவாதம் கோரவுள்ளோம்.
மேற்படி சம்பவம் தொடர்பில் பேராயர் வெளியிட்ட கருத்து நீதியானது. ஏனெனில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் எந்தவொரு பரிந்துரையும் இந்த ஆட்சியின்கீழ் அமுலாகவில்லை. வத்திக்கானில் நடைபெற்ற சந்திப்புகளின்போதும் இந்த விடயத்தை சுட்டிக்காட்டி இருந்தேன்.
வத்திக்கானின் வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வரவுள்ளார். மேற்படி பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தவே அவர் வருகின்றார்.” – என நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மேலும் கூறினார்.
