“ நீதிமன்றம் அழைப்புவிடுக்கும்வரை காத்துக் கொண்டிருக்காமல் தெரிந்த உண்மையை மைத்திரிபால சிறிசேன பகிரங்கப்படுத்த வேண்டும். உண்மையை மறைப்பதும் ஒருவகையில் குற்றமாகும்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கேள்வி: முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் உண்மைச் சூத்திர தாரியைத் தாம் அறிந்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார். உங்களின் நிலைப்பாடு என்ன ?
பதில்: அவரது கருத்து பாரதூரமானது. குண்டுத்தாக்குதல் தொடர்பில் அவருக்கு ஏதும் தெரிந்திருந்தால் அதனை அவர் பகிரங்கப்படுத்த வேண்டும். நீதிமன்றம் அழைப்பு விடுக்கும் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. உண்மை தெரிந்திருந்தும் அதனை மறைப்பதும் குற்றமாகக் கருதப்படும்.
கேள்வி: பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்?
பதில்: அவசரபப்ட வேண்டியதில்லை. உரிய நேரத்தில் எமது தீர்மானத்தை அறிவிப்போம்.
கேள்வி: ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினைக்குரியதாக உள்ளதாலா பொதுத்தேர்தலைக் கேட்கின்றீர்கள் ?
பதில்: அவ்வாறில்லை. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் அரசியல் கட்சிதான் பொதுத்தேர்தலிலும் வெற்றி பெறும். சகல தரப்புக்கும் சம அந்தஸ்து கிடைக்கப்பெற வேண்டுமாயின் பொதுத்தேர்தல் முதலில் நடத்தப்பட வேண்டும்.
கேள்வி: கோப் குழுவின் தலைவராக ரோஹித அபேகுண வர்தன நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புகள் வெளிப்பட் டுள்ளனவே?
பதில்: ரோஹித்த அபேகுணவர்தன மக்கள் பிரதிநிதி. ஆகவே அவர் கோப் குழுவின் தலைவராக நியமிக்கப்பட் டுள்ளார். வெளிநபரைத் தலைவராக நியமிக்கவில்லை.
கேள்வி: இந்த ஆண்டு இடம்பெறவுள்ள தேசியத் தேர்தல் கள் சவால்மிக்கதே?
பதில்: ஆம். இந்தச் சவால்களைக் காட்டிலும் பாரிய சவால்களை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். தற்போதைய சவால்களையும் சிறந்த முறையில் வெற்றிக் கொள்வோம் – என்றார்.
