உரம், விறகு தட்டுப்பாடு; தேயிலை உற்பத்தி பாதிப்பு

பெருந்தோட்டப்பகுதியில் உரம் மற்றும் விறகு தட்டுப்பாடு காரணமாக தேயிலை உற்பத்தி பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துவருவதாக பெருந்தோட்டத்துறை நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

எமது நாட்டுக்கு அந்நியசெலாவணியை மிகப்பெரிய அளவில் ஈட்டித்தந்த பெருந்தோட்ட துறை கடந்த காலங்களில் இரசாயன உர இறக்கமதி தடை செய்யப்பட்டதன் காரணமாக பாரிய அளவில் பாதிப்புககுள்ளாகியது. இந்நிலையில் தற்போது டீசல் விலையேற்றம் காரணமாக விறகின் விலை அதிகரித்துள்ளதால் தேயிலை தொழிற்சாலைகள் தேயிலை தூள் தயாரிப்பதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. சில தொழிற்சாலைகளுக்கு போதுமான அளவு விறகும் கிடைப்பதில்லை என்றும் இதனால் தரமான தேயிலை தூள் உற்பத்தி செய்வதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாகவும் தொழிற்சாலை நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். தேயிலை தளிர்களை தேயிலை தூளாக மாற்றும் நடவடிக்கை விறகு மூலமே இன்றும் பல தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த காலங்களில் பெருந்தோட்டங்கயில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளுக்கு ஒரு கனமீற்றர் விறகு 2000 ரூபாவுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டதாகவும் தற்போது ஒரு கனமீற்றர் விறகு 4000 ரூபாவாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகரிக்கப்பட்டும் விறகு பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் தேயிலை தொழிற்சாலை பொறுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மலையகப்பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளுக்கு கடந்த காலங்களில் யட்டியன்தோட்டை, கித்துல்கலை, பலாங்கொடை, மொரட்டுவ,இரத்தினபுரி உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து விறகு பெற்றுக்கொள்ளப்பட்டன. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக விறகு வியாபாரிகள் தொழிற்சாலைகளுக்கு விறகு விநியோகம் செய்வதனை நிறுத்தியுள்ளனர். தற்போது எமது நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாட்டினை நீக்குவதற்கு பெரும் துணையாக உள்ள பெருந்தோட்டத்துறையை பாதுகாப்பது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமையாகும்.

இரசாயன உரம் இல்லாததன் காரணமாக தேயிலை கொழுந்தின் அளவு பாரிய அளவில் குறைந்து பெருந்தோட்டத்துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வேலையில்லா பிரச்சினை ஏற்பட்டது. தற்போது விறகு பற்றாக்குறை காரணமாக தேயிலை தூளின் தரம் குறைந்து சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலைக்கான கேள்வி குறைந்து வருமானம் பாதிக்கப்படும் நிலை உருவாகும். எனவே இது குறித்து பொறுப்பு வாய்ந்தவர்கள் கூடிய அக்கறை செலுத்த வேண்டும் என தேயிலை உற்பத்தித் துறையினர் கோரிக்கை விடுகின்றனர்.

Related Articles

Latest Articles