உள்ளக பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை அடைய முடியும் என நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
வெளித் தலையீடுகள் அதன் உள்நாட்டு நீதி மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்குத் தடையாக இருக்கும் என்றும் இலங்கை மக்கள் ஒரு நியாயமான, சமமான மற்றும் வளமான சமுதாயத்தை உருவாக்க விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கை தொடர்பாக இலங்கை அரசு சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் கடந்த 11 மாதங்களில் அடைந்துள்ள முன்னேற்றங்கள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் ஊழல் ஒழிப்புக்கான உறுதிப்பாடுகள் குறித்து இந்த உரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
‘ இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம போன்ற உள்நாட்டு நல்லிணக்க பொறிமுறைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்த காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்திற்கு ( 375 மில்லியன் ரூபா மேலதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
செம்மணி புதைகுழி உட்பட பல்வேறு புதைகுழிகள் குறித்து சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பொலிஸ் துறையின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டு, ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் போன்ற பல நீண்டகால வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படுகின்றன.
பெரும்பாலான தனியார் காணிகள் உரிமையாளர்களிடம் விடுவிக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பிற்கு அத்தியாவசியமான காணிகள் மட்டுமே அரசு கட்டுப்பாட்டில் வைக்கப்படும், அதற்கான உரிய இழப்பீடு வழங்கப்படும்.
மோதல்களில் உயிரிழந்தோரை நினைவு கூரும் உரிமைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது, இதனால் இந்த ஆண்டு பல இடங்களில் நினைவு நிகழ்வுகள் சுதந்திரமாக நடத்தப்பட்டன.” – என வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.