உள்நாட்டு பொறிமுறையை பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்கின்றனர். எனவே, வெளிநாட்டு பொறிமுறையை அரசாங்கம் ஏற்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
” ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின்போது உள்ளக பொறிமுறையே ஏற்கப்படும் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருக்கின்றார். ஆனால் வெளிநாட்டு பொறிமுறையே சிறந்தது என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
உள்ளக பொறிமுறைமீது தமிழர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். குற்றம் இழைத்தவர்கள், இனப்படுகொலை செய்தவர்கள் உள்ளக பொறிமுறை ஊடாக பாதுக்காக்கப்படும் சூழ்நிலை காணப்படுகின்றது. எனவேதான் வெளிநாட்டு பொறிமுறையின் அடிப்படையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என கோருகின்றோம்.
வெளிநாட்டு பொறிமுறைக்கு அரசாங்கம் அஞ்சுவது ஏன்? குற்றமிழைத்த இராணுவம், புலனாய்வு பிரிவினர், அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஒட்டுக்குழுக்களை பாதுகாக்கும் நோக்கில்தான் வெளிநாட்டு பொறிமுறையை ஏற்க மறுக்கின்றனர்.
அச்சமில்லையெனில் வெளிநாட்டு பொறிமுறைக்கு அரசாங்கம் இணங்க வேண்டும்.
உள்நாட்டு பொறிமுறை ஊடாக நீதி கிடைக்காது என்பதை கடந்தகால அரசுகள் நிரூபித்துள்ளன. எனவே, வெளிநாட்டு பொறிமுறையை அரசாங்கம் ஏற்க வேண்டும்.” – எனவும் கோடீஸ்வரன் எம்.பி. குறிப்பிட்டார்.