ஊடகவியலாளர் தரிந்துவை உடன் விடுதலை செய்! மலையக தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் வலியுறுத்து

” ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர கைதுசெய்யப்பட்டமைக்கு கடும் எதிர்ப்பை வெளியிடுகிறோம். அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.” – என்று மலையக தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் குறித்த ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

இளம் ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர கைதுசெய்யப்பட்டமைக்கு “மலையக ஊடகவியலாளர் ஒன்றியம்“ வன்மையான கண்டனத்தை வெளியிடுவதுடன், அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென பகிரங்க கோரிக்கை விடுக்கிறோம்.

இளம் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் சுயாதீன ஊடகவியலாளருமான தரிந்து உடுவரகெதர நேற்று வெள்ளிக்கிழமை (28.07.2023) பொரளையில் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த போராட்டத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது கைதுசெய்யப்பட்டிருந்தார்.

பொலிஸாரால் கடுமையாக தாக்கப்பட்டே ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர கைதுசெய்யப்பட்டதுடன், இது தற்செயலாக நடந்த சம்பவமாக நாம் பார்க்கவில்லை. திட்டமிட்டே தாக்குதலுக்கு உள்ளக்கப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தொடர்ச்சியாக ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர, தமது பணிகளை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினரும் அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களும் தடைகளை ஏற்படுத்துவதன் ஊடாக இலங்கையின் ஊடகச்சுந்திரம் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது.

உடனடியாக ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுடன், அவரது விடுதலைக்காக மலையக ஊடகவியலாளர் ஒன்றியம் தொடர்ந்து குரல் கொடுக்கும்.” என்றுள்ளது.

Related Articles

Latest Articles