ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழு இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்துள்ள அழுத்தம் காரணமாகவே தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக பசறை தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் சஞ்சய் லட்சுமன் தெரிவிக்கின்றார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்;
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ஒரு மாத காலத்திற்குள் ரூபாய் 1700 ஆக அதிகரிப்பதாக அறிவித்திருந்தார். அவர் விடுத்த காலக்கெடு நிறைவடைய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் சம்பள அதிகரிப்பு தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. அவரது வாக்குறுதி இன்று பொய் ஆகியுள்ளது.
நான் கடந்த மார்ச் மாதம் இறுதிப் பகுதியில் இரண்டாவது தடவையாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைகுழுவில் இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த வலியுறுத்தி இருந்தேன். இதற்கு பின்னர் குறித்த விடயத்தில் கூடுதல் கரிசனைக் காட்டிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு தோட்டத் தொழிலாளர்கள் பெறும் நாட் சம்பளம் இலங்கையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் பெறும் வருமானத்திற்கு ஒப்பானது என்பதை இலங்கை அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டி, இந்நிலைமை ஐ.எம்.எப் உடன் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு எதிரானது என்பதை எடுத்து காட்டியிருந்தது.
இதற்கு பின்னரே தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார உட்பட அரச தரப்பினர் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தனர்.
எனினும் அவர்களின் வாக்குறுதிகள் இன்று பொய் ஆகியுள்ளன. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் தொடர்ந்தும் பொய் கூறும் நயவஞ்சக அரசியல்வாதிகளின் முகத்திரையை மக்கள் கிழித்தெறிய வேண்டும். இன்னும் இரு மாதங்களுக்குள் தொழிலாளர்களுக்கு ஐ.நாவின் அழுத்தம் காரணமாக ரூபா 1700 அல்லது 2 ஆயிரம் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும். அதற்கு எனது பங்களிப்பு உள்ளது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன் என்றார்.
ராமு தனராஜா
		
                                    









