“வாக்கு என்பது எமது பலம். உரிமைகளை வென்றெடுப்பதற்கான பலம்பொருந்திய ஜனநாயக ஆயுதம். எனவே, சலுகைகளுக்காக அந்த உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்ககூடாது என்பதுடன் தவறான நபர்களுக்கு ஆரவளிக்கும் வகையில் பயன்படுத்தவும்கூடாது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலாயுதம் தினேஷ்குமார் தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,
“ அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தி மக்களிடமே இருக்கின்றது. அந்த மக்கள் சக்திக்கு முன்னால் அரசியல் ரீதியிலான ஏனைய சக்திகள் எல்லாம் இரண்டாம்நிலைதான். எனவே, தமது வாக்குபலத்தின் முக்கியத்துவத்தை மக்கள் இம்முறை நிச்சயம் உணர்த்தவேண்டும். ஒரு விரல் புரட்சிமூலம் சமுக முன்னேற்றத்துக்கான அடித்தளத்தை இத்தேர்தலில் இடவேண்டும் என உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
கொள்கைகளையும், எதிர்கால திட்டங்களையும் முன்வைத்தே நாம் வாக்கு கேட்கின்றோம். குறிப்பாக மலையகத்தில் போதைப்பொருள் பாவனைக்கு முடிவு கட்டவேண்டும் என்பது எமது முதன்மை நோக்கங்களுள் ஒன்றாகும். எமது சமுகம் முன்நோக்க பயணிப்பதற்கு மதுபாவனையும் ஒரு தடையாக உள்ளமை கசப்பான உண்மையாகும். எனவேதான் மாற்றத்துக்கான எமது பயணத்தில் அதற்கும் முடிவு கட்டவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.
ஆனால், எமது மக்கள் சாராயத்துக்கும், சோத்து பார்சலுக்கும் அடிமையானவர்கள் என நினைத்துக்கொண்டு, அவற்றை வழங்கி வாக்குகளை வேட்டையாடுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். தமது அரசியல் இலாபத்துக்காக சமுதாயத்தை சீரழிப்பதற்குகூட அவர்கள் துணிந்துவிட்டனர். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். கடும் எதிர்ப்பையும் வெளியிடுகின்றோம்.
மலையகம் இன்று விழித்துக்கொண்டுள்ளது. சாராயத்தையும், சோத்து பார்சலையும் வழங்கினால் சாதித்துவிடலாம் என நினைப்பது வெறும் மாயையாகும். அந்த குறுக்குவழி அரசியல் பயணத்தை இன்றைய இளைஞர்கள் எதிர்க்கின்றனர். எனது சமுகம் சுதந்திரக்காற்றை சுவாசிப்பதற்கு முயற்சிக்கின்றது. எனவே, எமது சமுகத்தை தவறாக எடைபோடும் நபர்களுக்கு ஆகஸ்ட் 5 ஆம் திகதி தக்கபாடம் புகட்டுவார்கள்.
ஐக்கிய மக்கள் சக்தியால்தான் மலையகத்தில் மறுமலர்ச்சினை ஏற்படுத்தமுடியும். அதற்கு எம்மைபோன்ற புத்தாக்க சிந்தனைகொண்ட, புது யுகம் தொடர்பில் தூரநோக்கு சிந்தனைகொண்டவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அதற்கான ஆணையை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். நிச்சயம் வழங்குவீர்கள் என நம்புகின்றேன்.” – என்றார்.










