பாதாள குழு தலைவர் ‘கஞ்சிபான’ இம்ரான் தமிழகத்துக்கு தப்பிச்சென்றமை தொடர்பில், முன்கூட்டியே தகவல்களை திரட்டாமை சம்பந்தமாக புலனாய்வுதுறைமீது அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக இந்திய புலனாய்வு பிரிவே முன்கூட்டியே தகவல் வெளியிட்டிருந்தது. எனவே, இலங்கை புலனாய்வு பிரிவு பின்னடைவை சந்தித்துள்ளதா என்ற ஐயம் எழுகின்றது.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு, அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது ” கஞ்சிப்பான இம்ரான் கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி பிணையில் விடுதலையானபோது, அவர் தலைமன்னார் ஊடாக இராமநாதபுரத்திற்கு செல்ல உள்ளார் என இந்திய புலனாய்வு பிரிவு எச்சரித்திருந்தது.
இது குறித்து இலங்கை புலனாய்வுப்பிரிவினர் கவனம் செலுத்தாத நிலையில், இந்திய புலனாய்வுப்பிரிவினரின் தகவல்களுக்கு அமைய கஞ்சிப்பான இம்ரான் டிசம்பர் 25 ஆம் திகதி இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். இது சம்பந்தமாக ஏன் இலங்கை புலனாய்வுப்பிரிவினர் நடவடிக்கை எடுக்கவில்லை? என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன,
” இலங்கையில் இருந்து தப்பியோடினார் எனக் கூறப்படும் கஞ்சிப்பான இம்ரான் பற்றி அமைச்சரவையில் பேசப்படவில்லை. அது குறித்து எனக்கு தெரியாது. பாதுகாப்பு தரப்புதான் விளக்கமளிக்க வேண்டும். புலனாய்வுப்பிரிவினர் இதனை அறியாமல் இருந்தனரா என்பதை புலனாய்வுப்பிரிவுகளிடமே கேட்க வேண்டும்.
எமது புலனாய்வுப்பிரிவு பின்னடைவை சந்தித்துள்ளதா என்ற கேள்வி எழுகின்றது. ” – என்றார்.