இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை விமர்சிக்கும் பணியை மாத்திரமே கண்டி மாவட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னெடுத்துவருகின்றார் எனவும், அவர் மக்கள் தொடர்பில் சபையில் ஒன்றும் செய்வதில்லை எனவும் இதொகாவின் எல்பொட வட்டார அமைப்பாளரும், கொத்மலை பிரதேச சபை முன்னாள் உறுப்பினருமான செல்லமுத்து செல்வமதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
“ கண்டி மாவட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் 10 வருடங்களாக நாடாளுமன்றத்தில் இருக்கின்றார். கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கு அவர் என்ன செய்துள்ளார்? குறிப்பாக புஸல்லாவை பகுதியில் எந்தவொரு வேலைத்திட்டத்தையும் முன்னெடுத்தது கிடையாது.
ஒரு பிரதேச சபை உறுப்பினராக எமது பகுதியில் நாம் செய்த வேலையைக்கூட அவர் செய்தது கிடையாது. மாறாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதே அவரின் வேலை. மக்களுக்கு பயனுள்ள விடயங்கள் பற்றி பேசாது, காங்கிரஸை குறைகூறிவருகின்றார்.
புசல்லாவை பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்தவர் ரொச்சைல்ட் பகுதியை சேர்ந்தவர், ஆனால் டெல்டா என கண்டி மாவட்ட தமிழ் எம்.பி. கூறுகின்றார். தான் பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதியில் எங்கு சம்பவம் நடக்கின்றது என்பதுகூட அவருக்கு தெரியவில்லை. இப்படியானவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்ட வேண்டும்.” – என்றார்.










