கண்டி மாவட்டத்தில் ஆபத்தான பகுதிகளில் மக்களை மீளக்குடியமர்த்தக்கூடாது: உரிய பகுப்பாய்வு அவசியம்!
கண்டி மாவட்டத்தில் ஆபத்தான இடங்களெனக் கருதப்படும் பகுதிகளுக்கு இடைத்தங்கள் முகாம்களில் உள்ள மக்களை மீண்டும் அனுப்பக்கூடாது. மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையிலேயே ஏற்பாடுகள் இடம்பெற வேண்டும் என்று கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
“ சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட நிலையில் நாவலப்பிட்டிய பகுதிகளில் இடைத்தங்கள் முகாம்களில் உள்ள சிலரை, அவர்கள் முன்னர் வசித்த பகுதிக்கே செல்லுமாறு வற்புறுத்தப்படுகின்றனர் என எனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இப்படியான அணுகுமுறையை ஏற்கமுடியாது. ஆபத்தான பகுதியென அடையாளம் காணப்பட்டிருந்தால் அங்கு மக்கள் குடியேற்றத்தை மீள செய்யக்கூடாது. அதேபோல மீள்குடியேற்றத்தின்போது மக்களின் அபிப்ராயமும் கேட்டறியப்பட வேண்டும்.
அத்துடன், மக்கள் மீளக்குடியேறுவதற்கு பொறுத்தமான இடங்கள் எவை, ஆபத்தான பகுதிகள் எவை என்பன தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திடம் இருந்து அறிக்கை பெறப்பட்டே, உரிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். இதற்காக விசேட பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.” என்று வேலுகுமாரால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.










