வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ளது. 20 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்படும்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக்கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வலு சக்தி அமைச்சருக்கு எதிராக 10 காரணங்களை அடிப்படையாகக்கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியால் நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்த்து வாக்களிக்கும் தீர்மானத்தை எட்டு தமிழ்க்கட்சிகள் எடுக்கும் என தெரியவருகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டு வைத்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியன பிரேரணையை ஆதரிக்க ஏற்கனவே முடிவெடுத்துள்ளன.
எனினும், இலங்கைத் தமிழரசுக்கட்சி, ரெலோ மற்றும் புளொட் ஆகிய தமிழ்க் கூட்டமைப்பின் பங்காளிகளின் உத்தியோகப்பூர்வ முடிவு இன்னும் வெளியாகவில்லை என்றபோதிலும் ஆதரித்து வாக்களிக்கும் தீர்மானமே விரைவில் எடுக்கப்படலாம் என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான மக்கள் தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியனவும் ஆதரவு நிலைப்பாட்டையே எடுக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. சிலவேளை வாக்கெடுப்பில் பங்கேற்காவிட்டால்கூட எதிர்த்து வாக்களிக்கும் நிலைப்பாட்டில் மேற்படி கட்சிகள் இல்லை.
அதேவேளை, ஆளுங்கூட்டணியிலுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. மற்றும் பிள்ளையானின் கட்சி வலுசக்தி அமைச்சருக்கு எதிரான பிரேரணையையை எதிர்க்கவுள்ளன










