கருவுற்ற பெண் குழந்தையை ஆணாக மாற்றுவதாகக் கூறி கர்ப்பிணி பெண் ஒருவரின் தலையில் ஆணியால் அறைந்த ஒருவரை பாகிஸ்தான் பொலிஸார் தேடி வருகின்றனர்.
நெற்றியில் இரண்டு அங்குலம் அளவுக்கு ஆணி பாய்ந்த நிலையில் பெஷாவர் மருத்துவமனையில் அந்தப் பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத நம்பிக்கை அடிப்படையில் சுகப்படுத்துபவர் ஒருவரே இந்தச் செயலை செய்துள்ளார்.
ஏற்கனவே மூன்று பெண் குழந்தையை பெற்றிருக்கும் அவர் மீண்டும் பெண் குழந்தையை பெற்றால் கணவர் விவாகரத்துச் செய்வதாகக் கூறிய நிலையிலேயே அந்த சுகப்படுத்துனரை நாடியுள்ளார்.
அந்த ஆணியை குறடு கொண்டு சுயமாக அகற்ற அந்தப் பெண் முயன்று முடியாத நிலையில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். நெற்றியின் மேல் பகுதியை துளைத்திருந்த ஆணி அதிர்ஷ்டவசமாக மூளையை தாக்கவில்லை.
அந்த ஆணி அகற்றப்பட்டு அவர் வீடு திரும்பிய நிலையில் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸார் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
சூபித்துவ மரபு ரீதியான சுகப்படுத்துனர் ஒருவரே இதில் தொடர்புபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் மருத்துவமனையிலிருந்து சி.சி.டி.வி காட்சிகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விரைவில் அந்தப் பெண்ணை கண்டுபிடித்து, கணவர் மற்றும் மந்திரவாதியை கைது செய்வோம் என பெருநகர காவல்துறை தலைவர் அப்பாஸ் அஹ்சன் தெரிவித்துள்ளார்.