காசல்ரி நீர்த்தேக்கத்தில் ஈராண்டுகளுக்கு பின் தடுப்பு பலூன்களுக்கு மேலாக நீர் வான் பாய்வு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையை தொடர்ந்து, மத்திய மலை நாட்டில் மாலை வேளையில் அடை மழை பெய்துவருகின்றது. நீர் நிலைப்பகுதிகளில் பெய்துவரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக மலையகத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்து, வான்கதவுகள் அடிக்கடி திறக்கப்படுகின்றன.

காசல்ரி நீரேந்தும் பிரதேசத்தில் நேற்று மாலை பெய்த கடும் மழை காரணமாக இரண்டு வருடங்களுக்கு பின், நவீன தொழிநுட்பத்தில் அமைக்கப்பட்ட நீர் தடுப்பு பலூன்களுக்கு மேலாக நேற்று (22) திகதி இரவு 10 மணி முதல் நீர் வான் பாய்ந்து வருகிறது.

இதனால் நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மற்றும் களனி கங்கைக்கு சமீபமாக வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் நீரேந்தும் பிரதேசங்களில் பதிவாகிவரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக லக்‌ஷபான கெனியோன், மவுசாகலை, பொல்பிட்டிய, நவலக்ஸபான, மேல்கொத்மலை, விமல சுரேந்திர ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டமும் வான் பாயும் அளவினை எட்டியுள்ளன. எனவே எந்த வேளையிலும் வான் கதவுகள் திறக்கப்படலாம் என்பதனால் நீர்த்தேக்கங்களுக்கு கீழ் வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்சியாக பெய்து வரும் மழை காரணமாக நீர் நிலைகளின் நீர் மட்டமும் மிகவும் உயர்வாக காணப்படுகின்றன. இதனால் நீர் நிலைகளில் நீராடச் செல்வது, வெள்ளம் ஏற்படும் போது அருகாமையில் சென்று பார்வையிடுவதனை தவிர்ப்பதன் மூலம் ஆபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என பாது காப்பு பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

மலைவாஞ்ஞன்

Related Articles

Latest Articles