காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து முதற்கட்ட விசாரணை நிறைவு!

வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் 6 ஆயிரத்து 700 முறைப்பாடுகள் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் நிறைவுசெய்யப்படவுள்ளன.

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

வலுகட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் 16 ஆயிரத்து 700 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்குரிய நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.” எனவும் அவர் கூறினார்.

‘நாட்டில் கடந்த ஐந்து வருடங்களில் வலுகட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை. விசாரணை செய்ய வேண்டியுள்ள 10 ஆயிரம் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கான நிதி ஒதுக்கீடுக்குரிய அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

6 ஆயிரத்து 700 முறைப்பாடுகளில் 5 ஆயிரம் மேற்பட்டோருக்கு (குடும்பத்தார்) புனர்ஜீவன கொடுப்பனவாக 2 லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவருக்கு என்ன நடந்தது என்பதை நிர்ணயிக்கும்வரை காணாமல்போதல் தொடர்பான சான்றிதழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆட்பதிவு திணைக்களம் ஊடாக பலருக்கு அது வழங்கப்பட்டுள்ளது. சிலருக்கு மரண சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.” -எனவும் காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த தெரிவித்தார்.

ஓஎம்பி எனப்படும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக 25 உப பணிக்குழுக்கள் அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 16 ஆயிரத்து 966 முறைப்பாடுகளில் 10 ஆயிரத்து 517 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
இதற்குரிய நடவடிக்கையை 2027 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யும் நோக்கிலேயே மேற்படி குழுக்கள் அமைக்கப்படவுள்ளன என்று அரச தரப்பில் நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles