” மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துவிட்டோம். அதற்கான பொறிமுறையை அமைப்பதற்கு எதிரணிகளையும் உள்ளடக்கிய வகையில் குழுவொன்று அமைக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுவரும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தின்போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் முன்வைத்த கருத்துகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு.
” உங்களுக்கடைய (மனோ) சாதனைகளை பட்டியலிட்டீர்கள், வரவேற்ககூடிய விடயம்தான். நான் இல்லை என்றுகூறவில்லை. மலையக மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமெனில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து வேலை செய்ய வேண்டும். அதற்கான பொறுப்பு மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எம் அனைவருக்கும் உள்ளது.
காணி உரிமை விவகாரம் தொடர்பில் வேலைத்திட்டங்களை முடித்துவிட்டோம். இரு அமைச்சரவைப் பத்திரங்கள் முன்வைக்கப்பட்டன. காணி உரிமை பற்றி ஜனாதிபதியும் அறிவித்துள்ளார். இதற்காக குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி கூறியுள்ளார். ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும். ஒரு குடும்பத்துக்கான காணி அளவீட்டு பணிக்கு ரூ 20 ஆயிரம் செலவாகும். அந்த திட்டத்துக்காகவே 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
காணி உரிமை என்பது நீண்டகால கோரிக்கை. புதிய பொறிமுறை பற்றி பிரதமரிடம் இன்றும் பேசினோம். ஆளும் தரப்பில் மட்டுமல் அல்ல எதிரணியில் உள்ளவர்களையும் இணைக்க வேண்டும் என்றோம். அதற்கு பிரதமரும் உடன்பட்டார். அடுத்தக்கட்ட நகர்வு அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் தெரியவரும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒருகுரலாக வேலை செய்தால் எமது மக்களுக்காக இன்னும் அதிகம் சாதிக்கலாம். 2015 இற்கு பிற்பாடுதான் மலையகத்துக்கு வீடு வந்தது என்ற கருத்துடன் உடன்பட முடியாது. 1972 இல் இருந்தே அமரர்களான சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான, சந்திரசேகரன் போன்ற தலைவர்கள் 66 ஆயிரம் வீடுகளை மலையகத்துக்கு கொண்டுவந்துள்ளனர். இதில் 22 ஆயிரம் பேர் சுயமாக வீடு கட்டியுள்ளனர்.” – என்றார்.










