காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட இலங்கைக்கு ஆதரவு வழங்கப்படும் – பில் கேட்ஸ்

காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் (BMGF) இணைத் தலைவர் பில் கேட்ஸ் (Bill Gates) தெரிவித்தார்.

டுபாயில் நடைபெறும் COP 28 மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் (BMGF) இணைத் தலைவர் பில்கேட்ஸ்க்கும் இடையிலான சந்திப்பு இன்று (03) இடம்பெற்றது. காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் உலகளாவிய சவால் மற்றும் வெப்பவலயப் பிராந்தியத்தில் இலங்கையின் பங்களிப்பை மேம்படுத்துவது குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பான வேலைத்திட்டங்களுக்கு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்பு ஏற்கனவே தமது பங்களிப்ப வழங்கி வருவதாகவும், எதிர்காலத்தில் இந்த ஒத்துழைப்பு மேலும் விரிவுபடுத்தப்படும் எனவும் பில்கேட்ஸ் தெரிவித்தார்.

இலங்கையின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் மற்றும் விவசாயத்திற்கான தரவுக் கட்டமைப்பை நிறுவுவதற்கான முயற்சிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தியில் இலங்கையுடன் ஒத்துழைப்பை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் பில் கேட்ஸ் குறிப்பிட்டார்.

காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான கூட்டு அர்ப்பணிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் COP28 மாநாட்டில் இலங்கை முன்வைத்த முன்மொழிவுகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பில்கேட்ஸிடம் தெளிவுபடுத்தியதுடன், உலகிற்கே சவாலாக மாறியுள்ள சுற்றாடல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சர்வதேச முயற்சிகளில் பயனுள்ள பங்கை வகிக்க இலங்கை தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சுற்றாடல் அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், இலங்கையில் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்புடன் பரந்த அளவிலான மற்றும் பயனுள்ள பங்காளித்துவத்தை ஏற்படுத்தக்கூடிய துறைகள் குறித்தும் பிரதிநிதிகள் கலந்துரையாடினர்.

Related Articles

Latest Articles