கிண்ணியா விபத்து – பின்னணி என்ன? சபையில் தெளிவுபடுத்தினார் இராஜாங்க அமைச்சர்

கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் இழுவைப் படகு விபத்துக்குள்ளாகி மக்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு கிண்ணியா நகரசபையே பொறுப்புக்கூறவேண்டும். எனவே .நகரசபை தவிசாளரை உடன் பதவி நீக்கம் செய்து, அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் கேட்டுக்கொள்கின்றேன். சிஐடியினரும் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் – என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்தார்.

இழுவைப்படகு விபத்து தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று தெளிவுப்படுத்துகையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 2020 நவம்பர் 20 ஆம் திகதி பிரதேச செயலகத்தில் கூட்டமொன்று நடைபெற்றது. கிண்ணியா பிரதேச மற்றும் நகரசபை அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் அதில் பங்கேற்றனர். இதன்போது குறித்த பகுதியில் இழுவைப்படகு சேவையை முன்னெடுக்ககூடாது என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது.

எனவே, மாற்று வழியாக மூன்றரை கிலோமீற்றர் தூரமுள்ள வீதியை பயன்படுத்த வேண்டும் எனவும், இதனை வீதி அபிவிருத்தி அதிகார சபை புனரமைக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதன்பிரகாரம் வீதி புனரமைக்கப்பட்டது. அந்த வீதியை மக்கள் பயன்படுத்தும்போதும், சட்டவிரோதமாக இந்த இழுவைப்படகு சேவையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இழுவைப் படகு சேவையை முன்னெடுப்பதற்கு கிண்ணியா பிரதேச சபை முதலில் எம்மிடம் அனுமதி கோரியது. நாம் வழங்கவில்லை. அதன் பின்னர் கிண்ணியா நகரசபை கோரியது, அதற்கும் மறுப்பு தெரிவித்துவிட்டோம். முன்னெடுக்கவே கூடாது என திட்டவட்டமாக அறிவித்துவிட்டோம்.

எனினும், அதிகார எல்லையைமீறி கிண்ணியா நகரசபை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. வியாபாரிகள் குறுக்கு வழியில் பணம் உழைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. இதனால்தான் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு கிண்ணியா நகரசபையே பொறுப்புக்கூறவேண்டும். இது இடம்பெற்றிருக்கக்கூடாத விபத்து, ஆனால் முறையற்ற விதத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி அனுமதி வழங்கப்பட்டதாலேயே அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். கிண்ணியா நகரசபையின் தவிசாளர், நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்பின் மச்சான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தவிசாளரின் பதவி உடன் இடைநிறுத்தப்பட்டு, அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஆளுநரிடம் கேட்டுக்கொள்கின்றேன்.”- என்றார்.

Related Articles

Latest Articles