” இராஜாங்க அமைச்சு பதவியை துறப்பதற்கு நான் தயார். இது தொடர்பில் கட்சிக்கும் அறிவித்துள்ளேன். கட்சி கட்டளையிட்டால் நிச்சயம் விலகுவேன். ஆனால் நரிகளின் ஊளையிடலுக்கு அஞ்சப்போவதில்லை.” – இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர நேற்று அறிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து தன்னை கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே தயாசிறி ஜயசேகர இவ்வாறு அறிவிப்பு விடுத்துள்ளார்.
” பஸில் ராஜபக்ச மற்றும் பிபீ ஜயசுந்திர ஆகியோரின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே தற்போதைய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. இது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அமைச்சரவை அல்ல. சட்டிமுட்டி, பத்திக் என நகைச்சுவைத்தனமாக இராஜாங்க அமைச்சுகளைக்கூட பஸிலே உருவாக்கினார். அவர் நாடாளுமன்றம் வருவதால் மாற்றம் ஏதும் ஏற்படப்போவதில்லை.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர அண்மையில் வெளியிட்ட கருத்து அரச கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
” அரசின் தீர்மானங்களை ஏற்கமுடியாவிட்டால் , இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அரசியிலிருந்து வெளியேறுவதே சிறந்தது,” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் வலியுறுத்திவருகின்றனர்.
இந்நிலையில் பதவி விலகுவீர்களா என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியதாவது,
” நான் எனது கட்சிக்காக செய்யவேண்டிய விடயங்களை நிச்சயம் வெய்வேன். நாய் குறைப்பதால் மலை சரியப்போவதில்லை. எமது கட்சி உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். அவர்களும், மக்களும் எதிர்நோக்கும் பிரச்சினை பற்றியே பேசினேன். மாறாக எனக்கு அமைச்சு பதவி என்பது பிரச்சினையே கிடையாது. எனவே, பிரச்சினை தீரும்வரை போராடுவோம்.
நரிகள் ஊளையிடுவதால் நான் பதவி விலகமாட்டேன். பதவி விலக தயார் என கட்சிக்கு நேற்று முன்தினம் அறிவித்தேன். கட்சிக்காக இதையும் செய்ய தயார். கட்சி மற்றும் தலைவர் சொல்வார்களாயின் நிச்சயம் பதவி துறப்பேன்.” – என்றார்










