குர்ஆன் எரிப்பு சம்பவங்களால் சுவீடனின் கருத்துச் சுதந்திர சட்டத்திற்கு நெருக்கடி

சுவீடனில் தொடர்ந்து இடம்பெறும் முஸ்லிம்களின் புனித குர்ஆனை எரிக்கும் சம்பவங்கள் நாட்டின் நற்பெயரை மோசமாக பாதித்திருப்பதாகவும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு சேவை எச்சரித்துள்ளது.

இந்த செயலுக்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகள் பலதும் கோபத்தை வெளியிட்டுள்ளன.

குர்ஆனை எரிப்பதற்கு சுவீடனில் அனுமதி அளிக்கப்பட்டதாக செய்தி வெளியானதை அடுத்து ஈராக்கில் உள்ள தூதரகம் கடந்த வாரம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டது.

இந்தப் பிரச்சினையால் சுவீடனின் 1766 ஆம் ஆண்டு பழமையான அடிப்படை உரிமை பற்றிய சட்டம் பெரும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

“கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும் உலகின் வலுவான சட்டம் இருக்கும் நாடுகளில் ஒன்றாக சுவீடன் உள்ளது” என்று ஸ்டொக்ஹோம் பல்கலைக்கழக சட்ட பீட பேராசிரியர் மார்டன் ஸ்குல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

அந்த நாடு 1970களில் மத நிந்தனை சட்டங்களை அகற்றியது. மத விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்புவது உட்பட அதன் சட்டம் எந்த விடயத்திலும் கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்வதாக உள்ளது.

எனினும் ஸ்டொக்ஹோமில் குர்ஆனை எரிக்க அனுமதிக்கும் நிலையில் அந்நாட்டின் மைய வலதுசாரி அரசு சட்டங்களில் மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பில் பரிசீலித்து வருகிறது.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் குர்ஆனை எரிக்கும் இரு முயற்சிகளை சுவீடன் பொலிஸார் தடுத்திருந்தனர். பொது ஒழுங்கு சட்டத்தின் கீழே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் நீதிமன்றம் பொலிஸாரின் முயற்சியை தடுத்து தீர்ப்பளித்தது.

புத்தகம் எரிப்பது மற்றும் தவறான பிரசாரங்கள் சுவீடன் ஒரு சகிப்புத் தன்மை கொண்ட நாடு என்பதற்கு பதில் முஸ்லிம் எதிர்ப்பு நாடாக மாறுவதற்கு காரணமாகியுள்ளது என்று சுவீடன் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.

“சுவீடன் மற்றும் சுவீடன் நலன்கள் மீது நேரடி தாக்குதல் அச்சுறுத்தலை பாதுகாப்பு பொலிஸார் எதிர்கொண்டுள்ளனர்” என்று அந்த சேவை தெரிவித்துள்ளதோடு நாட்டின் ஐந்து கட்ட பயங்கரவாத அச்சுறுத்தல் அளவு மூன்றாம் கட்டத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles