இந்தியாவின் கேரள மாநிலத்தை போன்று இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கும் தோட்டங்களை பகிர்ந்தளிக்க வேண்டும் என இலங்கை சமசமாஜக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
பண்டாரவளை ஸ்ரீ பத்திரகாளியம்மன் தேவஸ்தான பிரதானியும் பாண்டவ ஜோதிட கலாநிதி சர்மா சுவாமி தலைமையில் இடம்பெற்ற தீபாவளி ஆராதனை மற்றும் கேதார கெளரி விரத விசேட பூஜையில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“நாம் கடந்த கால ஆட்சியாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் மற்றும் பொருளாதார பிரச்சினை தொடர்பாக பல விடயங்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தோம் .ஆனால் அனுபவம் இல்லாத அரசியல் வாதிகளின் ஆலோசனை காரணமாக நாம் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளோம்.
இதனால் தோட்ட மக்கள் சொல்லொணா துயரத்தில் வாழ்ந்து வருகின்றனர்.இவற்றை நாம் இன்னமும் பார்த்திருக்க முடியாது. தோட்டத் துரைமார் சம்மேளனம் வேதன உயர்வை இழுத்தடித்து வருகின்றது.அரசும் இது தொடர்பில் மெளனம் சாதிக்கிறது.இச் செயலை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
எமது கட்சியும் கட்சிக் கொள்கையும் இந்தியாவின் கேரள மாநிலத்திலும் உண்டு.இதைப் போன்று ஊவா மாகாணத்திலும் எமது கொள்கைகளையும் செயற்பாடுகளையும் ஸ்ரீ பத்திர காளி தேவஸ்தான பிரதானி கலாநிதி சர்மா சுவாமியின் தலைமையில் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார்.










