சமையல் எரிவாயு வெடிப்பு சம்பந்தமாகவும் எரிவாயுவின் தரம் பற்றி எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சு நடத்த பிரதமர் மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார். எதிர்வரும் 21 ஆம் திகதி இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

லிட்ரோ கேஸ் , லாப் கேஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவர்கள், எரிவாயு வெடிப்பு சம்பந்தமான விசாரணைகளை நடத்த நியமிக்கப்பட்ட குழுவினர், நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள், இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் அதிகாரிகள், பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு இச்சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு வெடிப்புகளுக்கான காரணம், அதற்கு பொறுப்புக் கூற வேண்டிய தரப்பு தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி நியமித்த நிபுணர்கள் குழுவின் முடிவுக்கு அமைய இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.










