‘கைது வேட்டையை உடன் நிறுத்தவும்’ – மனோ வலியுறுத்து!

முகநூல் பதிவுகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு அநாவசியமான கைதிகளும் அச்சுறுத்தல்களும் கொழும்பில் இடம்பெறுவதாகவும் உடனடியாக இத்தகைய அநீதியான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமெனவும் மனோ கணேசன் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் இதுவே பொலிசாரின் முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அது தொடர்பில் ஜனாதிபதி உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்:

கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களை வைத்துக்கொண்டு முகநூல் மூலம் படங்கள், தகவல்களை திரட்டி கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் இளைஞர்கள் அநீதியான முறையில் கைது செய்யப்படுகிறார்கள்.

அவ்வாறான இளைஞர்களின் விபரங்கள் பெறப்பட்டு அவர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றார்கள். இத்தகைய நடவடிக்கைகளை நாம் முற்றாக கண்டிக்கின்றோம்.

மே ஒன்பதாம் திகதி வரை மிகவும் அமைதியான முறையிலேயே ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பதை அனைவரும் அறிவர். அந்த ஆர்ப்பாட்டத்தை அவதானித்த சர்வதேச நாடுகளின் தூதுவர்கள் இது உலகிற்கே ஒரு ‘மொடல்’ என வரவேற்றனர்.

ஜனாதிபதி மாளிகைக்குச் சென்ற பொலிசார் அங்கு பியானோ வாசிப்பதையும் ஜிம் பயிற்சிகளில் ஈடுபடுவதையும் நாம் காண முடிந்தது. அவ்வாறிருக்கையில் சாதாரண மக்கள் ஜனாதிபதி மாளிகைக்குச் செல்லும் போது இத்தகைய ஆசைகள் வருவது இயல்பே.

அதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு இளைஞர்கள் கைது செய்யப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் தவறானது. நாம் வன்முறையை ஆதரிப்பவர்கள் அல்ல. அந்த வகையில் இத்தகைய அச்சுறுத்தல்கள் கைதுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என கூறப்படுகின்றபோது இத்தகைய செயற்பாடுகள் அதற்கு பங்கமாகவே அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles