” சுகாதார அமைச்சால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கள் முழுமையாக பின்பற்றப்படவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.” -இவ்வாறு கொட்டகலை பொதுசுகாதார பரிசோதகர் சௌந்தராகவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள திருமண மண்டபங்களின் உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வுக்கூட்டம் இன்று (9) முற்பகல் கொட்டகலை கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.
கொட்டகலை பிரதேச சபையின் செயலாளர், கிராம சேவகர் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது திருமண நிகழ்வு உட்பட மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வுகளின்போது சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக பின்பற்றப்படவேண்டும் என வலியுறுத்திய சுகாதார பரிசோதகர் சௌந்தராகவன், கடந்த காலங்களில் அவ்வாறு பின்பற்றப்படவில்லை என கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.
அத்துடன், சுகாதார அமைச்சால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்கள் முழுமையாக பின்பற்றப்படவேண்டும், தவறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.