பாதுக்க, அங்கம்பிட்டிய பகுதியில் உள்ள ஹோட்டலொன்றை தாக்கி சேதப்படுத்தி, குறித்த ஹோட்டலை நடத்திச்சென்ற தம்பதியினரை தாக்கினர் எனக் கூறப்படும் இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாதுக்க – அங்கம்பிட்டிய பகுதியில் உள்ள ஹோட்டலொன்றுக்கு நேற்று முன்தினம் 18 ஆம் திகதி இரவு இருவர் சென்றுள்ளனர், இதன்போது இரவு உணவுக்காக கொத்து ரொட்டியை வழங்குமாறு கூறிவிட்டு, சிறிது நேரத்துக்கு பின்னர் ‘கொத்து ரொட்டி வேண்டாம்; பரோட்டா வேண்டும்” என கூறியுள்ளனர்.
ஹோட்டலில் பரோட்டா ரொட்டி தீர்ந்துபோனதால் ஹோட்டல் உரிமையாளர் அவர்களிடம் பரோட்டா ரொட்டி முடிந்துவிட்டதாக கூறியுள்ளார். அத்துடன், கொத்து ரொட்டி தயாரிக்கப்பட்டுவிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, பின்னர் இருவரும் ஹோட்டல் உரிமையாளர்களான தம்பதியினரை தாக்கிவிட்டு ஹோட்டலையும் சேதப்படுத்தியுள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள மண் வியாபாரிகள் இருவரே தாக்குதலை நடத்தியுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஹோட்டல் உரிமையாளர் தாக்கினார் எனக் கூறி மற்றையவர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று, பின்னர் வெளியேறியுள்ளார்.
அதேவேளை, தாங்கள் கூலி வீட்டில்தான் தங்கி இருந்ததாகவும், இந்த சம்பவத்தையடுத்து ஊரைவிட்டு வெளியேறுமாறு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது எனவும் ஹோட்டல் உரிமையாளரின் மனைவி கூறியுள்ளார்.
ஹோட்டலையும், வீட்டையும் கூலிக்கே பெற்றுள்ளனர். அவர்கள் இன்று அந்த வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
